(நா.தனுஜா)

இனம், மதம் மற்றும் கட்சிகளின் அடிப்படையில் எமது தலைமுறை பிளவடைந்துவிட்டது. ஆனால் இந்த நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கு அத்தகைய மோதல்கள், பிளவுகளற்ற புதியதொரு அரசியல் நுட்பத்தை இளம் தலைமுறையினர் பின்பற்ற வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியிருக்கிறார்.

இளம் தலைவர்களை ஒன்றிணைக்கும் நோக்கிலான 'தலைமுறை' என்ற புதிய செயற்திட்டம் இன்றைய தினம் பி.ப 3 மணியளவில் கொழும்பில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. இச்செயற்திட்டம் தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் காணொளியொன்றில்  கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

எமது தலைமுறை கட்சிகள், இனம் மற்றும் மதம் ஆகியவற்றின் அடிப்படையில் பிளவடைந்திருக்கிறது. எனினும் இந்த நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கு இளம் சமுதாயத்தினர் எவ்வித மோதலுமற்ற ஓர் புதிய அரசியல் நுட்பத்தைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

மேலும், ஒரு விரிவான இலக்கினை அடைந்துகொள்வதற்கு அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயற்படக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு 'தலைமுறை' ஒரு சிறந்த களமாக அமையும் என்றார்.