தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தவுடன் உடனடியாக மீள் ஏற்றுமதியை நிறுத்தியதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுவடைய செய்வதற்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கேகாலை கலிகமுவயில் நேற்று (2020.07.09) இடம்பெற்ற சந்திப்பில் உரையாற்றிய பிரதமர், விவசாய மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே எங்கள் அரசாங்கத்தின் நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

2005ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையான எங்கள் ஆட்சியின் போது நாட்டிற்கு உணவு வழங்கிய விவசாய மக்களுக்கும், விவசாயத்திற்கும், உரிய அங்கீகாரம் கிடைத்த போதிலும், ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த அனைத்து சந்தர்ப்பத்திலும் விவசாயத்தை கவனிக்காமல் விட்டதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய ரயர் தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பில் இதுவரையிலும் ஜனாதிபதியின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் அதன் மூலம் தேசிய இறப்பர் விவசாயிகளின் பொருளாதாரத்தை வலுவடைய செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த போர் காலம் தொடர்பில் இதன் போது கருத்து வெளியிட்ட பிரதமர், அரசாங்கம், துப்பாக்கியை கையில் எடுத்த பயங்கரவாதிகளுடன் போரிட்டதே தவிர தமிழ் மக்களுடன் அல்ல என குறிப்பிட்டுள்ளார்.

சிறு பிள்ளைகளின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருந்த சைனைட் குப்பிகளை அகற்ற முடிந்ததனை பாக்கியமாக கருதுகிறேன்.  பயங்கரவாதத்தை நிறைவுக்கு கொண்டு வந்தமையினாலேயே இன்று நாட்டவர்கள் அனைவரும் சுதந்திரமாக தங்கள் பயணங்களை மேற்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

நாட்டின் மேலதிக நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்ல கூடிய கட்சிக்கு அதிகாரத்தை வழங்குமாறு இங்கு பிரதமர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் அமைச்சர் கனக ஹேரத், தாரக பாலசூரிய உட்பட இம்முறை பொது தேர்திலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களும் இணைந்திருந்தனர்.