(செய்திப்பிரிவு)

இலங்கை பொலிஸ் சேவை விலகல் கட்டளை வழங்கியுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை மீளவும் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான செயன்முறைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கத்தகவல் திணைக்களம் அறிவித்திருக்கிறது. 

இலங்கை பொலிஸ் சேவை (விசேட அதிரடிப்படையினர் உள்ளடங்கலாக) விலகல் கட்டளை வழங்கியுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை மீண்டும் சேவையில் இணைத்தல் தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள கொள்கை ரீதியான தீர்மானத்திற்கமைய குறித்த உத்தியோகத்தர்களை மீளவும் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான செயன்முறைகள் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதுகுறித்த விபரங்கள் www.defence.lk மற்றும் www.police.lk  ஆகிய இணையத்தளங்கள் வாயிலாகப் பெற்றுக்கொள்ள முடியும். அத்தோடு பொலிஸ் சேவை விலகல் கட்டளை வழங்கியுள்ள உத்தியோகத்தர்களுக்கான ஆட்சேபனை மனு சமர்ப்பிப்பதற்காகப் பாதுகாப்பு அமைச்சால் வெளியிடப்பட்ட அறிவித்தல் கடந்த ஜுன் மாதம் 17 ஆம் திகதி வெளியான வீரகேசரி, லங்காதீப, தினமின, தினகரன் ஆகிய பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய இலங்கை பொலிஸ் சேவை விலகல் கட்டளை வழங்கியுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை மீளசேவையில் இணைப்பதற்கான ஆட்சேபனை மனு கோரப்பட்டு வருவதுடன், குறித்த ஆட்சேபனை மனுக்களை இம்மாதம் 17 ஆம் திகதிவரை மேலதிக செயலாளர்(சட்டம் மற்றும் ஒழுங்கு), பாதுகாப்பு அமைச்சு, 14 ஆவது மாடி, இசுறுபாய, பத்தரமுல்ல என்ற முகவரியில் சமர்ப்பிக்க முடியும் என்றும் அரசாங்கத்தகவல் திணைக்களம் தெரிவித்திருக்கிறது.