வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்ப அனுமதிக்கப்பட்ட பிரஜைகளின் எண்ணிக்கையை 50 சதவீதமாக குறைக்க முடிவெடுத்துள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் வெள்ளிக்கிழமை 288 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தொற்று நோய் தொடங்கியதிலிருந்து அவுஸ்திரேலியாவில் எந்தப் பகுதியிலும் பதிவாகாத அதிகளவான ஒரே நாள் எண்ணிக்கையாகும்.

இவ்வாறான நிலைமைகள் காரணமாகவே மேற்கண்ட முடிவினை எடுத்துள்ளதாக அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கோட் மோரிசன் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் முதல் அவுஸ்திரேலிய பிரஜைகள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களை மட்டுமே நாட்டிற்குள் நுழைய அந் நாட்டு அரசாங்கம் அனுமதித்தது. அவர்கள் நாட்டை வந்தடைந்ததும் ஹோட்டல்களில் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இதற்கான செலவுகளை அரசாங்கம் பொறுப்பேற்றிருந்தது.

இந் நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அவுஸ்திரேலியா ஒவ்வொருவாரமும் நாடு திரும்பும் பிரஜைகள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பாளர்களின் தொகையை சரி பாதியாக குறைக்கவுள்ளது.

அத்துடன் நாடு திரும்பும் அனைவரும் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான செலவுகளையும் அவர்களே பொறுப்பேற்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.