(செ.தேன்மொழி)

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளினால் பெண்களே பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். எனவே அவர்களின் பிரச்சினைகளை நாட்டுக்கு தெரியப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் திங்கட்கிழமை எமது கட்சியினால் பெண்களை மையப்படுத்திய கொள்கைத்திட்டம் வெளியிடப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் தொடர்பான கொள்கைத்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிடப்படவுள்ளது. கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வுகள் கொழும்பில் அமைந்துள்ள தாமரைத் தடாகத்தில் பிற்பகல் மூன்று மணியளவில் இடம்பெறவுள்ளது.

இதன்போது பெண்களுக்கு நலனை பெற்றுக்கொடுக்கும் வகையில், எமது ஆட்சியில் நாங்கள் மேற்கொள்ளவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் தெரியப்படுத்த இருப்பதுடன், இதன்போது கட்சியின் பெண் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளனர். இந்த நிகழ்வுகளில் நாட்டிலுள்ள பெண்கள் அனைவரையும் கலந்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பெண்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பெண்கள் தொடர்ந்தும் அமைதிகாப்பதை நிறுத்திவிட்டு தங்களது எண்ணங்களை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார்.