(செ.தேன்மொழி)

போதைப் பொருள் கடத்தல் காரர்களினால் ஏற்பாடு செய்யப்படும் பிரசார கூட்டங்களில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கலந்துக் கொண்டால் அவர் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படும்.

 என தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர , தயவு செய்து இவ்வாறான கூட்டங்களை தவிர்க்குமாறும் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

தற்போது போதைப் பொருள் கடத்தல்கள் தொடர்பான சுற்றிவளைப்புகள் பெருந்தொகையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும் சாதாரண கடத்தல் காரர்களையே பொலிஸார் கைது செய்து வருகின்றனர் , 

பெருந்தொகையில் கடத்தல்களில் ஈடுப்படுவோர் கைது செய்யப்படுவதில்லை. ராஜபக்ஷர்கள் எப்போதும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் மதுபான விற்பனைக்கு எதிராக செயற்படுபவர்கள் என்று தங்களை காண்பித்துக் கொண்டு , இந்த செயற்பாடுகளில் ஈடுப்படுபவர்களுடன் இணைந்தே தங்களது அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பார்கள்.

இந்த வகையிலே நேற்றைய தினம் தெமட்டகொட பகுதியில் பிரபள போதைப் பொருள் கடத்துல்காரரான தெமட்டகொட சமிந்தவின் மகன் உள்ளிட்ட குழுவினரால் ஆளும் தரப்பினருக்கு சார்பாக பிரசார கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் , இதில் ஜனாதிபதியும் கலந்துக்கொள்ளவுள்ளார். 

.பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைவிடவும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சிறந்தவர் என்று மக்கள் நம்புகின்றனர். போதைப் பொருள் கடத்தலுக்கு எதிர்ப்பை தெரிவிப்பதாக காண்பித்துக் கொண்டு, அந்த கடத்தல் காரர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டங்களுக்கு தலைமைத்தாங்குதல் மிக கீழ்தரமான செயற்பாடாகும்.

இவ்வாறு செயற்படுவதால் மக்கள் கோத்தாபயவின் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அதனால் இவ்வாறான கூட்டங்களை தவிர்ப்பதே மிகவும் சிறந்தது. இதனால் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி செயற்படுமாறு நாங்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம். மத்தியவங்கி பிணைமுறி மேசடியில் பெருந்தொகையான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. 

இது போன்ற முறைக்கேடுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி , குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகளை பெற்றுக் கொடுப்பதை விடுத்து , சாதாரண நபர்களை கைது செய்துவருவதால் எவ்வித பயனும் கிடைக்கப்போவதில்லை.