நட்சத்திர டென்னிஸ் வீரரான ரபாயல் நடால் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் (யூ.எஸ். ஓபன்) பங்குபற்றமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் 13 ஆம் திகதி வரை நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது.

எனினும், நியூயோர்க் நகரில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் நிறைய வீரர்கள் அங்கு செல்ல தயக்கம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியின் நடப்பு சம்பியனும், ஸ்பெய்ன் டென்னிஸ் வீரருமான ஸ்பெய்னின் ரபாயல் நடால்  செப்டம்பர் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார்.

இதன் மூலம் அவர் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், செப்டம்பர் 27 ஆம் திகதியன்று ஆரம்பமாகும் களிமண் தரை போட்டியான பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் போட்டிக்குத் தயாராகும் வகையில் அவர் மெடட்ரிட் பகிரங்க டென்னிஸ் போட்டியில் களமிறங்க முடிவு செய்திருப்பதாக டென்னிஸ் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.