(செ.தேன்மொழி)

கரைப்படியாத தூய்மையான பச்சை நிறமே ஐக்கிய மக்கள் சக்தியிடம் இருக்கின்றது. அனைத்து இனத்தவரும் எம்முடன் இணைந்துக் கொண்டுள்ளமையினால் அதனை காண்பிக்கும் வகையில் மஞ்சள் நிறத்தையும் கட்சி கொண்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்மத்தும பண்டார தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அரசாங்கத்திற்கு முறைக்கேடான செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தாது கட்சியின் நிறம் தொடர்பில் ஐ.தே.க. பேசிவருவதானது ,  முன்பள்ளி சிறார்களின செயற்பாடுகள் போன்றே இருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்ட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது,

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அரசாங்கத்தின் முறைக்கேடான செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தாது , ஐக்கிய தேசியக் கட்சியினர் எமது செயற்பாடுகளின் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். எமக்கு அவர்களுடன் எந்த போட்டியும் கிடையாது. ஆளும் தரப்பினருடனே நாங்கள் போட்டியில் ஈடுப்பட்டு வருகின்றோம். அவர்களின் செயற்திறன் அற்ற ஆட்சி முறைத் தொடர்பில் மக்களுக்கு தெளிவை ஏற்படுத்தி அடுத்த ஆட்சியை கைப்பற்றுவதே எமது நோக்கம். இந்நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்களும் நம்பிக்கை இழந்துள்ளனர். அதனால் அடுத்த தேர்தலில் எமது வெற்றி உறுதியாக்கப்பட்டுள்ளது.

ஆளும் தரப்பினர் எம்மீது அச்சம் கொண்டு எமக்கு எதிராக செயற்பட்டு வருகின்ற நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியினரும் எமக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். இதேவேளை எங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தார்கள். தற்போது நிறம் தொடர்பில் சிக்கல் நிலைமையை தோற்றுவிக்க முயற்சிக்கின்றார்கள். ஐ.தே.க.வின் கரைப்படிந்த பச்சை நிறத்தை நாங்கள் எடுக்கவில்லை. எம்மிடம் தூய்மையான பச்சைநிறமே இருக்கின்றது. அது மாத்திரமின்றி அனைத்து இனத்தவர்களும் எம்முடன் இணைந்து செயற்படுவதனால் மஞ்சள் நிறத்தையும் நாங்கள் கொண்டுள்ளோம்.

உண்மையான ஐக்கிய தேசியக் கட்சி , நிறத்திலோ ,சின்னத்திலோ, சிறிகொதா என்ற கட்டிடத்திலோ கிடையாது , கட்சியின் கொள்கை எந்த இடத்தில் செயற்படுத்தப்படுகின்றதோ மற்றும் கட்சியின் பெரும்பான்மையான ஆதரவாளர்கள் யாருடன் இணைந்து செயற்படுகின்றார்களோ அங்குதான் ஐ.தே.க.வும் இருக்கின்றது. இந்நிலையில் இவர்கள் இலைகளில் உள்ள பச்சை நிறமும் தங்களுடையது என்றும் உரிமைக்கோருவார்கள் போன்றே தோன்றுகின்றது. நாட்டில் பாரிய நெருக்கடிகள் இருக்கும் போது நிறம் ஒன்றை பற்றி இவர்கள் பேசிவருவது முன்னபள்ளி சிறார்களின் செயற்பாடுகளைப் போன்றே இருக்கின்றது.

முஸ்லிம் காங்கரசும் பச்சை நிறத்தைதான் கொண்டுள்ளது. அது தொடர்பில் அமைதியாகதானே இருந்தார்கள். இந்த நிறம் தொடர்பான சட்டசிக்கல்கள் தொடர்பில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிலிருந்து எந்தவித அறிவிப்பும் எமக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் நாங்கள் அது தொடர்பில் கவனம் செலுத்தப்போவதில்லை.  இதேவேளை ஐ.தே.க எப்போதும் இருந்த உறுப்பினர்களை நீக்குவதை தவிர , புதிதாக எந்த உறுப்பினர்களையும் இணைத்துக் கொள்வதற்கு முயற்சித்ததில்லை. இதனால் அவர்கள் தொடர்பில் பேசுவதற்கு நாங்கள் விரும்பவில்லை.