( ரி.விரூஷன் )

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் சுமார் 60 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவினை யாழ்.மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஜீவ தர்மரட்ண தலமையிலான விஷேட பொலிஸ் அணியினர் கைப்பற்றியுள்ளதுடன் இது தொடர்பில் சந்தேகத்தின்பேரில் ஒருவரை கைது செய்துமுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக யாழ் .மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிக்கையில்,

இன்றைய தினம் எமது விஷேட போதைப்பொருள் தடுப்புப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றையடுத்து குருநகர் பகுதியில் சிறிதளவு கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வெளிமாவட்டமொன்றுக்கு கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 40 கிலோ கேரள கஞ்சாவினை பருத்தித்துறை பகுதியில் இருந்து பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட கஞ்சாவானது கேரள கஞ்சா என்றும் அதன் மொத்த பெறுமதி அறுபது இலட்சம் ரூபா எனவும் பொலிஸ்மா அதிபர் சன்ஜீவ தர்மரட்ண தெரிவித்தார். 

கஞ்சா கடத்தல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

அத்துடன் தொடர்ச்சியான விசாரணைகளின் மூலம் மேலும் கஞ்சா கடத்தல் தொடர்பான தகவல்கள் கிடைக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.