தென்கொரிய தலைநகரான சியோல் நகரின் மேயர் பார்க் ஒன் சூன் காணாமல்போன நிலையில், சுமார் 7 மணி நேரத்தின் பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த மேயரின் சடலம் சியோலின் சங்பக் என்ற மலைப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

64 வயதுடைய பார்க் ஒன் சூன் வயது தென்கொரிய தலைநகரான சியோல் நகரின் மேயராகவும் தென்கொரியாவின் இரண்டாவது சக்தி வாய்ந்த தலைவராக இருந்து வந்துள்ளார். 

இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு மேயராக தெரிவுசெய்யப்பட்டார். அதன்பின்னர் 2018 ஆம் ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்று மேயரானார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சியோல் மேயர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் மேயர் பார்க் மீது 'மி டூ' மூலம் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். 

இந்நிலையில் மேயர் பார்க் ஒன் சூன் திடீரென காணாமல் போயிருந்தாதாக செய்திகள் வெளியாகின. அவர்  காணாமல்போன தகவலை அவரது மகள் பொலிஸாருக்கு தெரிவித்தார்.

இதையடுத்து விசாரணை நடத்திய பொலிஸார், அவரது செல்போன் கடைசியாக சியோலின் சங்பக் என்ற மலைப்பகுதியில் செயல்பாட்டில் இருந்தது. 

அதன்பிறகு செல்போன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சியோலின் சங்பக் மலைப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 600 பேர் , மேயரை தீவிரமாக தேடினர். சுமார் 7 மணிநேர தேடுதலுக்கு பின்னர் அவரை குறித்த பகுதியில் இருந்து சடலமாக மீட்டனர். அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து தென்கொரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.