ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் அமையவிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய அரசாங்கத்தில் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானுக்கு மிகப்பெறுமதியான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிஒன்றை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

பசறை தேர்தல் தொகுதிக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனைவின் தேர்தல் பிரசார அலுவலகம் கடந்த திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் ஊவா மாகாண முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பெதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட வேட்பாளர் உதித் லொக்கு பண்டார அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் சிறுபான்மை மக்களையும் இணைத்துச்செல்ல வேண்டும் என்பதுதான் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

கடந்த காலங்களில் செந்தில் தொண்டமானின் செயற்பாடுகளும் அவரது ஆளுமையும் அனைவர் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆதலால் மலையக மக்களுக்கு சேவையாற்றுவதற்கு செந்தில் தொண்டமானுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள பெறுமதியான அமைச்சு ஒன்றை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.

மறந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மலையகத்தின் சிறந்த தலைவராகத் திகழ்ந்தார். அவர் இறுதியாக பெருந்தோட்ட மக்களுக்கான ஆயிரம் ரூபா அடிப்படைச் சம்பளக் கோரிக்கையை முன்வைத்திருந்தார். அத்துடன் இறுதிவரை மக்களுக்காக சிந்தித்த தலைவராக செயற்பட்டார்.

ஆதலால் அவர் ஆதரவு தெரிவித்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை அதிகப்படியான வாக்குகளால் பசறை மக்கள் வெற்றிபெறச்செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.