(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பை மாற்றம் செய்வதற்கு மூன்றில்  இரண்டு   பெரும்பான்மை அவசியமாகிறது. அதற்காக அனைவரும் எங்களுடன் இணைய வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  அழைப்பு விடுத்தார்.

அத்துடன் நடைமுறை  அரசியலமைப்பில் உள்ள ஒரு சில உறுப்புரைகள் இனங்களை வேறுப்படுத்துகின்றதே தவிர ஒன்று சேர்க்கவில்லை.  ஆகவே  அரசியலமைப்பினை மாற்றுவதற்கும்,  அனைவருக்கும் பொருந்தும் அரசியலமைப்பினை உருவாக்குவதற்கும் தற்போதும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குருநாகல் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற முஸ்லிம் சமூத்தினருடனான  சந்திப்பின்போது கருததுரைக்கையிலேயே பிரதமர்      மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றிபெற்றதன் பின்னர் நாடு புதிய யுகத்தை நோக்கி பயணிக்கிறது.  ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய முஸ்லிம் தலைவர்கள் இருந்தனர். அதன் பின்னர்   எங்களுடைய கட்சியிலும் முஸ்லிம் தலைவர்கள் அங்கம் வகித்தார்கள். அவர்கள் எங்களுக்காக வாக்கு கேட்டுச் சென்ற நிலையும் காணப்பட்டது. 

ஆனால் சில சில முரண்பாடுகள ஏற்பட்டன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து  வெளியேறியதை    தொடர்ந்து  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற புதிய கட்சியை உருவாக்கினோம். அதன் ஊடாக போட்டியிட்ட முதல் தேர்தலில் பாரிய வெற்றியை பெற்றோம்.

ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலுக்கு பயம் என்பதால் மாகாண சபையை காலவரையறையின்றி  பிற்போட்டது. அதற்கு முஸ்லிம் தலைவர்களும் கட்சிகளும் உதவி செய்தனர்.  அதனால்   முஸ்லிம் ,  தமிழ்  சிங்கள மற்றும் கிருஸ்தவ மக்கள் என அனைவரின் உரிமையும் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.