இந்த நாட்டின் அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துக்கள் சிறுபான்மை மக்கள் மத்தியில் மிகுந்த விசனத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளன.

தமக்கு தேவையான வேளைகளில் அதற்கேற்றாற் போன்று கருத்துக்களை கூறுவதும் மக்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்துவதும் அரசியல்வாதிகளின் ஒருவகை யுக்தியாகவே இருந்து வருகின்றது  .

அந்த வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு அரசியலமைப்பு சார் பிரச்சினைகள் ஏதும் கிடையாது என்றும் பொருளாதார பிரச்சினைகள் மாத்திரமே உள்ளன என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன கூறியுள்ளதுடன் அதிகாரப் பகிர்வு சமஷ்டி ஆட்சி ஆகிய விடயங்களை குறிப்பிட்டுக்கொண்டு தமிழ் அரசியல்வாதிகள் அரசியலில் செல்வாக்கு செலுத்துவதாகவும் கூறுகின்றனர்.

அதுமாத்திரமன்றி வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் ஆதரவு இல்லாமல் பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க முடியாது என்று குறிப்பிடுவது தவறு என்பதை ஜனாதிபதி தேர்தலில் நிரூபித்துள்ளோம். ஒரு கட்சி பாராளுமன்றத்தில் தனித்து மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவைப்பெற்று அரசாங்கத்தை அமைக்க முடியாது என்பதையும் இம்முறை மாற்றி அமைப்போம் என்றும் அவர்  சூளுரைத்துள்ளார் .

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் இக்கருத்து தமிழ் பேசும் மக்கள் மத்தியில் மிகுந்த விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மை மக்களின் ஆதரவைக் கோரி பிரதமரும் மற்றும் பொதுஜன பெரமுனவில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களும் நாடெங்கு பிரசாரப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.  

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் ஆதரவு இல்லாமல் பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க முடியாது என்று குறிப்பிடுவது தவறு என்றும் வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு அரசியலமைப்பு சார் பிரச்சினைகள் எதுவும் கிடையாது என்றும் கூறியுள்ளார்.

இதன்மூலம் சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவு தமக்கு தேவையில்லை என்று கூற வருகிறாரா? என்று கேள்வி எழுப்பியுள்ள சிறுபான்மை மக்கள் ஜனநாயக நாடொன்றில் இனம், மதம் சார்ந்த நிலையில் அரசாங்கத்தை அமைக்க முனைவதும் அது தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதும் சர்வதேச அங்கீகாரத்தை கேள்விக்குறியாக்குவதாகவே அமையும் என்றும் கூறுகின்றனர்.

பல்லின மக்கள் வாழும் ஜனநாயக நாடு என்ற வகையில் அனைத்து இன மக்களையும் அரவணைத்து செல்வது இன்றியமையாததாகும். உலகில் முன்னேற்றமடைந்து முன்னணியில் திகழும் நாடுகள் தங்கள் பிரஜைகளை ஒரு போதும் பிரித்தாள நினைப்பதில்லை. அனைத்து இன மக்களையும் ஒரு தாய் பிள்ளைகள் போன்றே கருதுகின்றன. இதன் காரணமாகவே நாட்டு பிரஜைகள் மத்தியில் ஐக்கியமும்  இது நமது நாடு என்ற நாட்டுப்பற்றும் மேலோங்குகிறது.

மாறாக அரசியல்வாதிகள் வாக்கு வேட்டைக்காக இனவாதக் கருத்துக்களை விதைத்து அதன் மூலம் பயனடைய முனைவார்களேயானால் இறுதியில் அதுவே அவர்களின் எதிர்பார்ப்புகளை இல்லாதொழிக்க வழிவகுப்பதாக இருக்கும் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்