(செ.தேன்மொழி)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷவை பிரதமராக்கும் எண்ணத்திலேயே அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஹிருனிக்கா பிரேமச்சந்திர தெரிவித்தார்.

அத்துடன் அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார திட்டத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை மறைப்பதற்காக கொவிட் - 19 வைரஸ் பரவலை காரணங்காட்டி வருகின்றனர்.  இதேவேளை வைரஸ் பரவலின் இரண்டாம் அலை தொடர்பில் தற்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.  இரண்டாம் அலையை கட்டுபடுத்துவதற்கான திட்டங்களை மேற்கொள்ள அரசாங்கத்திடம் நிதி இல்லை என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்திற்கு வெளிநாடுகளிலிருந்தும் , உள்நாட்டில் சில தனவந்தர்களிடமிருந்தும்  கோடிக்கணக்கான நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளன. இந்த நிதிக்கு என்ன நடந்தது? மக்களுக்கு இது தொடர்பில் அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும். இந்நாட்டு பிரஜை என்ற வகையில் அது தொடர்பில் தெரிந்துக் கொள்வதற்கு எமக்கு உரிமையுள்ளது. ராஜபக்ஷாக்கள் சுனாமி நிவாரண நிதியை எவ்வாறு கொள்ளையிட்டார்கள் என்பது தொடர்பில் நாமறிவோம்.  அதனால் இவர்களின் செயற்பாடுகள் மீது எமக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.