(ஆர்.யசி)

இலங்கை விமானப்படைக்கு நான்கு "ஹெலிகொப்டர்" ரக விமானங்களை கொள்வனவு செய்ய, ஜனாதிபதி அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுள்ளார். நான்கு ஹெலிகொப்டர்களையும் கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் சர்வதேச விலைமனு கோரியுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை இணைப் பேச்சாளர் வைத்தியர் ரமேஷ் பத்திரன இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை விமானப்படை பயன்படுத்தும் ஹெலிகொப்டர்கள் 1981 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட பழைய விமானங்களாகும். எனவே விமானப்படையினர் பயிற்ச்சிகளை பெற்றுக்கொள்ள புதிதாக நான்கு விமானங்கள் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவை நான்கும் பாவிக்கப்பட்ட விமானங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை விமானப்படை இப்போதே சூடான் மற்றும் மத்திய ஆபிரிக்காவில் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறான நேரங்களில் எமது விமானப்படையினர் பயிற்ச்சிகளை  பெற்றுக்கொள்ள வேண்டியது அத்தியாவசியமான காரியமாகும். அதற்காகவே எதிர்காலத்தில் இவ்வாறான பாவிக்கப்பட்ட நான்கு ஹெலி விமானங்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

அத்துடன் இலங்கை முப்படையினர் மற்றும் பொலிஸ் கனிஷ்ட சேவை உத்தியோகத்தர்களுக்கும் அரச நிறுவனங்களிலுள்ள நிறைவேற்று அலுவலர்களுக்கான பயிற்சி வழங்கும் பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள் கல்லூரி பாடநெறிகளைப் பயில்வதற்காக வெளிநாட்டு அலுவலர்களுக்கு 2009 ஆம் ஆண்டு தொடக்கம் கட்டணம் இல்லாமலும் கட்டண அடிப்படையிலும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய ஆசியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்கா நாடுகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு கட்டண அடிப்படையில் 12 வாய்ப்புகளும் கட்டணம் இல்லாத அடிப்படையில் 30 வாய்ப்புகளும் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.

குறித்த பாடநெறிகளைப் பயில்வதற்கு 2021 ஆம் ஆண்டு தொடக்கம் சிங்கப்பூருக்கு கட்டணமின்றி ஒரு அனுமதியும் கட்டண அடிப்படையில் ஒரு அனுமதியும் வழங்குவதற்காக மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.