(ஆர்.யசி)

தண்டனை நிறைவேற்றப்பட்ட குற்றவாளிகளை இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு மற்றும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசுக்கும் இடையே ஒப்படைத்தலுக்காக முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தம் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரொமேஷ் பதிரன தெரிவித்தார். எனினும் பயங்கரவாத சட்டத்தின் கீழும் போதைப்பொருள் கடத்தல் குற்றத்திலும் கைதுசெய்யப்பட்டவர்கள் ஒப்படைக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இந்த காரணிகளை முன்வைத்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் குற்றமிழைத்துத் தண்டனை நிறைவேற்றப்பட்டு சிறையில் அடைக்கப்படும் வேற்று நாட்டுப் பிரஜைகளுக்கு குற்றவாளியின் நாட்டில் தண்டனையை அனுபவிக்கவும், வெளிநாடொன்றில் அவ்வாறு தண்டனைக்கு ஆளாகிய இலங்கையருக்கு குறித்த தண்டனையை இலங்கையில் அனுபவிக்கவும், ஏற்புடைய வகையில் இலங்கைக்கு ஒப்படைத்தல் தொடர்பான சட்ட ஏற்பாடுகள் 1995 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க குற்றவாளிகள் ஒப்படைத்தல் சட்டத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்ட ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கை ஏனைய நாடுகளுடன் உடன்படிக்கையொன்று எட்டப்பட வேண்டும்.

அதற்கமைய இலங்கையிலும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய குடியரசிலும் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளவர்களில் பயங்கரவாதச் செயல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக குற்றமிழைத்து தண்டனை நிறைவேற்றப்பட்ட குற்றவாளிகள் தவிர்ந்த ஏனைய குற்றவாளிகள் இரு நாடுகளுக்குமிடையே பரிமாற்றிக் கொள்வதற்கான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவதற்காக நீதிமன்ற நடவடிக்கைகள், மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

எனினும் பயங்கரவாத செயற்பாடுகளில் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள், மற்றும் போதைப்பொருள் கடத்தில் குற்றத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களுக்கு இந்த சட்டம் செயற்படாது என்பதும் முக்கியமான விடயமாகும்.