(செ.தேன்மொழி)

தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக 1981 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் சட்டம் ,  பொலிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் தொற்று நீக்க சட்டவிதிகளுக்கு கீழ் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் காலங்களில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது  கடைபிடிக்க வேண்டிய சட்டவிதிகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களில் , வேட்பாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் எவரும் அவர் சார்பில் வீடுகளுக்குச் சென்று பிரசாரங்களில் ஈடுப்பட முடியாது. வேட்பாளரின் உறவினர்கள் அல்லாத ஏனையவர்கள் பிரசாரத்தில் ஈடுபடலாம்.

வேட்புமனு தக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து , தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒருவாரம் ஆகும் வரையில் எந்தவித பெரஹெரா மற்றும் விழாக்களில் வேட்பாளர்கள் கலந்துக் கொள்ளக் கூடாது. அதேவேளை சமய நிகழ்வுகளில் அரசியல் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்க கூடாது.

இந்நிலையில் மூன்று பேர் மாத்திரமே வீடுகளுக்குச் சென்று பிரசாரங்களில் ஈடுப்பட முடியும். இதேவேளை வேட்பாளர்களின் கட்சி கொள்கைத்திட்டம் , சின்னம் , அவர்களது போட்டி இலக்கம் , புகைப்படம் , துண்டுபிரசுரம் மற்றும் சுவரொட்டிகளை வாக்காளர்களின் இல்லங்களுக்குச் சென்று கையளிக்க முடிவதுடன் ,  வாகனங்களில் அதனை காட்சிப்படுத்த முடியாது.

இதேவேளை இல்லங்கள் தோரும் சென்று தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடும் போது , குறித்த வீட்டு உறுப்பினர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பிரசாரங்களில் ஈடுப்படுவதுடன் ஒலிபெறுக்கிகளை உபயோகிக்கக் கூடாது. இதன்போது வேட்பாளர்களின் சின்னம் , இலக்கம் , புகைப்படம் ஆகியவற்றை காட்சிப்படுத்தும் வகையிலான ஆடைகளை அணிந்து செல்வதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

தொற்றுநீக்க சட்டவிதிகளை உள்ளடக்கி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டவிதிகளுக்கமைய காலை 7 மணி தொடக்கம் இரவு எட்டு மணிவரையிலேயே பிரசாரங்களில் ஈடுப்படமுடியும்.

வேட்பாளர்களின் கட்சி , கொடி மற்றும் பதாதைகளை பிரசார கூட்டம் இடம்பெறும் தினத்தில் , கூட்டம் நடைபெறும் இடத்தில் மாத்திரமே காட்சிப்படுத்த முடியும். அதேவேளை வேட்பாளர் அவரின் சொந்த வாகனத்தில் அவரது கட்சியின் சின்னம் , இலக்கம் மற்றும் கட்சியின் கொடியை காட்சிப்படுத்தலாம். ஆனால் வாகனத்தின் பொதுவான நிறத்தை மாற்றும் வகையிலோ பின்பகுதி கண்ணாடியை  மூடும் வகையிலோ காட்சிப்படுத்தக்கூடாது.

ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி மேற்கொள்ளும் பிரசார கூட்டகளை நடத்துவதற்காக பொலிஸாரிடம் அனுமதிப் பெற்றுக் கொள்வதுடன் , ஒலிபெருக்கிகளை பயன்படுத்தாமல் மேற்கொள்ளும்  சிறியளவிலான கூட்டங்களுக்கு அனுமதி பெற்றுக் கொள்ள தேவையில்லை. கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளுக்கமையவே இந்த கூட்டங்கள் இடம்பெற வேண்டும்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒருவாரம் கடக்கும் வரையில் எந்தவித கூட்டங்களையும் நடத்த கூடாது. ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படக் கூடாது. தேல்தல் நடைபெறும் போது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவளிக்கும் வகையில் பொது இடங்களில் அவரது புகைப்படம் , சின்னம் , இலக்கம் ஆகியவற்றை காட்சிப்டுத்துவது , துண்டுபிரசுரம் வழங்குவதையோ தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

வேட்பாளர்களுக்கு ஆதவளிக்கும் வகையில் அச்சிடப்படும் துண்டு பிரசுரங்கள் மற்றும் சுவரொட்டிகளில் அச்சி நிலையத்தினதும் , அவற்றில் கருத்து தெரிவிப்பவர்களினதும் பெயர் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு பதிவுச் செய்யபடாத துண்டுபிரசுரங்கள் அல்லது சுவரொட்டிகளை வேட்பாளர் இன்றி வேறொருவர் வழங்கினால் இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

எல்.ஈ.டீ. திரை பொறுத்தப்பட்ட வாகனங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களை கூட்டங்கள் இடம்பெறும் இடங்களில் மாத்திரமே நடாத்த முடியும். வீதிகளில் பயணிக்கும் போது பிரசாரம் செய்யமுடியாது. இதேவேளை தேர்தல் காலப்பகுதியில் வேட்பாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் பேரணிகளை நடத்தவோ அதனை ஒழுங்குச் செய்வதையோ தவிர்த்துக் கொள்ளவதுடன் , மதவழிபாட்டு தலங்களில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதும் தடைச்செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய மேற்படி சட்டவிதிகளை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக  1981 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் சட்டம் , பொலிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் தொற்று நீக்க சட்டவிதிகளுக்கு கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனையும் வழங்கியுள்ளார்.

--