(எம்.ஆர்.எம்.வஸீம்)

தேர்தலில் அரசாங்கத்துக்கு பின்னடைவு ஏற்படப்போவதாக புலனாய்வு தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. அதனால் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாமல் பிரசார கூட்டங்களை நடத்தி தேர்தலை பிற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி தேசியப்பட்டியல் உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்தார்.

தேசிய ஐக்கிய முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொந்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் ஜனாதிபதியின் உருவப்படங்களை காட்சிப்படுத்த வேண்டாம் என அண்மையில் ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு செய்திருந்தது. ஆனால் பொதுத் தேர்தலில் அரசாங்கத்துக்கு 90ஆசனங்களைவிட அதிக ஆசனங்கள் கிடைக்கப்பெறாது என புலனாய் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, ஜனாதிபதி உடனடியாக செயற்பட்டு புத்தளம் மாவட்டத்துக்கு தேர்தல் பிரசாரத்துக்கு சென்றிருந்தார். 

அதேபோன்று தேர்தல் அறிவிக்கப்பட்டு இதுவரை ஊடகங்களுக்கு முன்வராத பசில் ராஜபக்ஷ் நேற்று பொதுஜன பெரமுன கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, கட்சிக்குள் இடம்பெற்றுவரும் கருத்து முரண்பாடுகள் விமர்சனங்களை நிறுத்திக்கொள்ளுமாறும் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள தேவையான பிரசாரங்களை மாத்திரம் மேற்கொள்ளுமாறும் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோன்று இம்முறை தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது சுகாதார வழிகாட்டல்கள் கட்டாயம் கடைப்பிடிக்கப்படவேண்டும் என தேர்தல் திணைக்களம் வலியுறுத்தி இருக்கின்றது. குறிப்பாக பிரசார கூட்டங்களில் கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டங்களுக்கு 500பேருக்கு அதிக எண்ணிக்கையில் மக்களை கூட்டவேண்டாம் என்றும் சமூக இடைவெளி கட்டாயம் பேணப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் கொராேனா இரண்டாவது அலைக்கான அச்சுறுத்தல் இருப்பதாக சுகாதார முறையினர் அடிக்கடி தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் மஹிந்த ராஜபக்ஷ் கலந்துகொள்ளும் தேர்தல் பிரசார கூட்டங்களை தவிர ஏனைய கட்சித்ததலைவர்கள் கலந்துகொள்ளும் பிரசாரக்கூட்டங்களில் சுகாதார வழிகாட்டல்கள் இயன்றளவு பின்பற்றப்படுகின்றன. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ் கலந்துகொண்டு வரும் குருணாகல் கூட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்வதுடன் எந்தவிதமான சுகாதார வழிகாட்டலும் பின்பற்றப்படுவதும் இல்லை. இதுதொடர்பாக பொலிஸார், தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் கண்டுகொள்வதாக தெரிவதில்லை. ஆனால் கொராேனா தொற்று அச்சுறுத்தல் இருப்பதை அறிந்தும் மஹிந்த ராஜபக்ஷ் திட்டமிட்டே இவ்வாறு செயற்படுகின்றார்.

ஏனெனில் அரசாங்கத்துக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதை அறியக்கிடைத்ததும், கொரோனா தொற்று பரவலை ஏற்படுத்தி, தேர்தலை பிற்படுத்துவதே இவர்களின் திட்டமாகும். அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் விரக்தியே இந்த நிலைக்கு காரணமாகும். கடந்த 8 மாதங்களாக அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. பொய் பிரசாரத்தையே மேற்கொண்டு வருகின்றது என்றார்.