ஸ்ரீ லங்கா அமரபுர மகா நிக்காயவின் ஸ்தாபக தேரர்களை நினைகூரும் நிகழ்வு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பங்கேற்புடன் நேற்று (08) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

Commemoration of Amarapura Maha Nikaya founding Theros held under President’s patronage

வெலிதர மககராவே சங்கைக்குரிய ஞானவிமலதிஸ்ஸ தேரர் செய்த பெரும் அர்ப்பணிப்பை தொடர்ந்து 1803ஆம் ஆண்டு அமரபுர மகா நிக்காய தாபிக்கப்பட்டது.

சங்கைக்குரிய மடிகே பஞ்ஞாசீஹ, அக்க மகா பண்டித சங்கைக்குரிய பலாங்கொட ஆனந்த மைத்ரி தேரர், சங்கைக்குரிய திவுல்தென ஞானீஸ்ஸர மகாநாயக்க தேரர்கள், அமரபுர மகா நிக்காயவிற்கு தலைமை வகித்ததுடன், சங்கைக்குரிய பொல்வத்தே புத்ததத்த வாதீக சிங்க தேரர், சங்கைக்குரிய மீகெட்டுவத்தே குணானந்த தேரர் போன்ற சாசனத்தின் மேன்மைக்காக பாடுபட்ட தேரர்கள் அமரபுர மகா நிக்காயவிலிருந்து உருவாகினர்.

218 வருடங்களாக பௌத்த சாசனத்திற்கு பெரும் பங்காற்றிய தேரர்களை நினைவுகூர்ந்து அமரபுர தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் அக்க மகா பண்டித சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச மகா நாயக்க தேரர் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். 

ஜனாதிபதியினால் அமரபுர மகா நிக்காயவின் ஸ்தாபக தேரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச, மகாநாயக்க தேரரின் வாழ்க்கை சரிதை வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், அதன் முதற் பிரதி ஜனாதிபதி அவர்களினால் தம்மாவாச மகாநாயக்க தேரரிடம் கையளிக்கப்பட்டது.

அமரபுர நிக்காயவிற்கு சொந்தமான அனைத்து விகாரைகளினதும் விபரங்களை உள்ளடக்கி எழுதப்பட்ட அமரபுர விகாரைகள் தொடர்பான நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. 

அமரபுர ஸ்தாபக தினத்தை முன்னிட்டு சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச நாயக்க தேரர் மற்றும் பேராசிரியர் சங்கைக்குரிய பல்லேகந்தே ரத்தனசார தேரர் ஆகியோர் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமொன்றை கையளித்தனர்.

மூன்று நிக்காயாக்களினதும் மகாநாயக்க தேரர்கள், அனுநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகாசங்கத்தினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.