வெலிகடை சிறைச்சாலையில் 315 கைதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவர்களில் எவரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கை நேற்றிரவு கிடைத்துள்ளதாக கொவிட்-19 கட்டுப்பாட்டிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

வெலிகடை சிறைச்சாலையில் நேற்று முன்னதினம் கைதியொருவர் கொரோனா தெற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கந்தக்காடு போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, ஜூன் 27 ஆம் திகதி வெலிகடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட 40 கைதிகளில் ஒருவரே செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்றுக்குள்ளானவராக அடையாளம் காணப்பட்டார்.

அதன்படி சம்பந்தப்பட்ட சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகள் ஆகியோரை பி.சி.ஆர். சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டும் உள்ளனர்.

இதற்கிடையில், வெலிகடை சிறையிலிருந்து, ஜூன் 27 ஆம் திகதிக்கு பிறகு வீடு திரும்பிய கைதிகளைக் கண்டுபிடிக்க தேடல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.