கொவிட்-19 நோய்த்தொற்று சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினால் உருவாகியுள்ள பாதிப்பிலிருந்து தொழிற்படையை பாதுகாப்பதற்கு விசேட கவனம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

'கொவிட் 19னும் தொழில் உலகமும் - சிறந்ததோர் தொழில் எதிர்காலத்தை கட்டியெழுப்புதல்' என்ற கருப்பொருளின் கீழ் சர்வதேச தொழில் தாபனம் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது ஜனாதிபதி ஆற்றிய உரையின் முழு வடிவம் வருமாறு :  

'கொவிட் 19னும் தொழில் உலகமும் - சிறந்ததோர் தொழில் எதிர்காலத்தை கட்டியெழுப்புதல்' என்ற கருப்பொருளின் கீழ் சர்வதேச தொழில் தாபனம் ஏற்பாடு செய்திருக்கும் இந்த சர்வதேச மாநாட்டில் எனது கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

கொவிட் 19 நோய்த்தொற்றுக்கு எதிராக நாம் அனைவரும் போராடிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் தமது தொழில் உலகை தொடர்ச்சியாக பேணுவதற்காக அனைத்து நாடுகளும் மேற்கொண்ட நடவடிக்கைகளை பாராட்டுகின்றேன்.

கொவிட் 19 நவீன காலப்பகுதியில் மிகப்பெரும் மனித நெருக்கடியை தோற்றுவித்துள்ளது. அதன் விளைவாக, கொவிட் 19க்கு பிந்திய காலப்பகுதியில் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போன்றே அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலும் தொழில் உலகம் முக்கியமான மறுசீரமைப்புக்கு உட்பட்டு வருகிறது.

இலங்கை வெளி தீர்மான அளவுகோல்களை சார்ந்த அபிவிருத்தியடைந்துவரும் பொருளாதாரத்தை கொண்டுள்ளது. இந்த நோய்த்தொற்று சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினால் உருவாகியுள்ள பாதிப்பிலிருந்து எமது தொழிற்படையை பாதுகாப்பதற்கு நாம் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.

இலங்கை 8.6 மில்லியன் பேரைக் கொண்ட ஒரு செயற்திறமான தொழிற்படையை கொண்டுள்ளது. அதில் சுமார் 3.5 மில்லியன் பேர் தனியார் துறையில் பணியாற்றுகின்றனர். கொவிட் நோய்த் தொற்றின் ஆரம்ப காலப்பகுதியில் நாம் அறிமுகப்படுத்திய சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொழிற்படையின் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கியது.

ஏப்ரல், மே மாதக் காலப்பகுதியில் மிகவும் பாதிக்கப்பட்ட சுயதொழில்களில் ஈடுபட்டோருக்கு 5,000 ரூபா வீதம் நிலையான மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இதில் நாளாந்த சம்பளம் பெறும் அனைத்து ஊழியர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சுயதொழிலில் ஈடுபட்டவர்கள் போன்ற பாதிக்கப்பட்ட பிரிவினர் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.

இலங்கையின் தொழிற்படையில் நாட்டுக்கு வெளியே தொழில் செய்கின்ற கணிசமானவர்கள் உள்ளனர். விமானம் மூலமான பயணத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் கூட நாம் இதுவரையில் வெளிநாடுகளிலிருந்து சுமார் 15,000 இலங்கையர்களை நாட்டுக்கு மீண்டும் அழைத்து வந்துள்ளோம். இந்த நிலைமை எமது முழு தொழில் கட்டமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்திய போதும் எமது தொழிற்படையின் உயிர்களை பாதுகாப்பதே எமது நோக்கமாகும்.  இந்த தொழிற்படை பிரிவானது மீண்டும் தாம் ஏற்கனவே தொழில் செய்து வந்த வெளிநாடுகளுக்கு செல்லாமல் உள்நாட்டு தொழிற்சந்தைக்கு பங்களிக்கும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. இது எமது தொழில் உலகின் புதிய போக்கை வடிவமைப்பதாக அமையும்.

இலங்கையின் திறன்கள் துறை கொவிட் 19க்கு பிந்திய காலப்பகுதிக்கு ஏற்ற வகையில் ஒரு மீள் சிந்திப்பை, மீள் பொறிமுறையை வேண்டி நிற்கின்றது. நெருக்கடி காலப்பகுதியில் தொழில்களை இழந்தவர்களை வலுவூட்டுவதற்கான எமது செயற்திட்டத்தில் மீள் திறனளித்தல் மற்றும் தொழிலாளர்களின் திறன் விருத்தி குறித்து கவனம் செலுத்தப்படும்.

2022 ஆம் ஆண்டாகும்போது பாரதூரமான சிறுவர் தொழிலை ஒழிப்பதற்கு இலங்கை உறுதியளித்துள்ளது. இந்த அர்ப்பணிப்புக்கு அமைவாக கொவிட் 19 நோய்தொற்று பரவல் காலப்பகுதியில் ஊரடங்கு நிலைமைகளின் போதும் கூட பாரதூரமான சிறுவர் தொழில் குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்து எமது தொழிற் திணைக்களம் தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

தொழிற் படையுடன் சம்பந்தமான அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் எமது தொழில் அமைச்சர் தலைமையிலான முத்தரப்பு செயலணியே கவனம் செலுத்தி வருகின்றது. இச்செயலணி தொழில் பாதுகாப்பு, சம்பள மீளாய்வுகள் தொடர்பான விடயங்கள் உட்பட தொழில் வழங்குனர்களின் பிரதிநிதிகள், தொழிலாளர்கள் மற்றும் தொழில் அதிகாரிகளுக்கிடையில் கலந்துரையாடப்படும் அனைத்து விடயங்கள் தொடர்பிலும் தனி மையமாக செயற்பட்டு வருகின்றது.

நாடுகளுக்கு நீண்டகால திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அளவுக்கு கொவிட் 19 நிலைமை சர்வதேச ரீதியாக ஒரு சமநிலைமையை எட்டவில்லை என நான் நினைக்கிறேன். எனினும் குறுகிய கால இயல்பு நிலைமையொன்றை தோற்றுவிப்பதற்கும் அதனை மத்தியகால அளவுக்கு ஸ்திரப்படுத்துவதற்கும் போதுமான சந்தர்ப்பம் இதன்மூலம் உருவாகியுள்ளது. இலங்கை கொவிட் 19 காலப்பகுதிக்கு பிந்திய காலப்பகுதி புதிய இயல்வு நிலைக்கு ஏற்ற வகையில் எமது நாட்டின் தொழில் உலகை மீள் ஒழுங்கு செய்வதற்கு இதனை ஒரு சிறந்த அடித்தளமாக இலங்கை கருதுகின்றது.

இச்சந்தர்ப்பம் அனைத்து நாடுகளும் தமது தொழில் உலகை சிறப்பாக மீள் ஒழுங்குபடுத்துவதற்கும் இந்த பூகோள அனர்த்தத்தை தொடர்ந்து பாதுகாப்பாகவும் பலமாகவும் மீள் எழுவதற்கும் உதவும் என நான் எதிர்பார்ப்பதுடன், அதற்காக பிரார்த்திக்கிறேன்.