(இராஜதுரை ஹஷான்)  

     தமிழ் மக்கள்    எதிர்  தரப்பினருக்கு   ஆதரவு  வழங்குவது பயனற்றது.  மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரை   தெரிவு செய்வதா, அல்லது   பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதா  என்பது குறித்து  மலையக மக்கள்   கனவம் செலுத்த வேண்டும். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  தலைமையினால அரசாங்கம்  தோற்றம்பெற்றால் மாத்திரமே   மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். என பொதுஜன பெரமுனவின்  பதுளை மாவட்ட வேட்பாளரும்,   இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உப தலைவருமான  செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

 பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில்   இன்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்   மேலும் குறிப்பிடுகையில்,

  ஐக்கிய தேசிய கட்சி இரண்டாக  பிளவுப்பட்டுள்ளது.  தமிழ் மக்கள் குறிப்பாக  மலையக  மக்கள் இனி ஐக்கிய தேசிய கட்சியையோ, ஐக்கிய மக்கள் சக்தியையோ நம்புவது பயனற்றதாகும். இவ்விரு கட்சிகளுக்கு  பெரும்பான்மையின  மக்கள் ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டார்கள். என்பதை இடம் பெற்றுமுடிந்த ஜனாதிபதி தேர்தலின் பெறுபேறுகளின் ஊடாக அறிந்துக் கொள்ளலாம்.

பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன அமோக வெற்றிப் பெறும்  தற்போதைய  நிலையில் மலையக மக்கள் அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும். தோல்வியடையும்  எதிர் தரப்பினருக்கு ஆதரவு வழங்குவதால் எவ்வித  பயனும் ஏற்படாது.  எதிர்  தரப்பினர் தோல்வியடைந்தால் அது  அவர்களுக்கு எவ்விதத்திலும்  பாதிப்பினை ஏற்படுத்தாது.   ஆனால்   மீண்டும் மலையக மக்கள் அரசியலில் பின்தள்ளப்படுவார்கள். ஆகவே  இம்முறை  வெற்றிப் பெறும் கட்சிக்கு  அதாவது  ஸ்ரீ லங்கா  பொதுஜன பெரமுனவிற்கு  ஆதரவு  வழங்க வேண்டும்.

  மலையக  மக்கள் தொடர்பில்  தற்போது அக்கறை கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சியினர் மற்றும் ஐக்கிய மக்கள் கட்சியினர் கடந்த  அரசாங்கத்தில்  முன்னேற்றகரமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.  ஆனால்   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ   மலையகத்தக்கு   பாரிய அபிவிருத்தி திட்டங்களை  பயன்பெறும் விதத்தில் முன்னெடுத்தார். பெயரளவான    அபிவிருத்திகளை அவர் மலையகத்தில் முன்னெடுக்கவில்லை.

  இம்முறை பொதுத்தேர்தல் ஊடாக  மலையகத்தில் இருந்து அதிக  அமைச்சர்களை  உருவாக்க வேண்டும் என்பதே எமது  இலக்கு   மலையகத்தில் இருந்து ஒருவர்  பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுவதற்கும், அமைச்சராக  தெரிவு செய்யப்படுவதற்கும் இடையில் பாரிய  வேறுப்பாடுகள் உள்ளன.  அமைச்சரா அல்லது பாராளுமன்ற  உறுப்பினரா என்பதை மலையக மக்கள்   தீர்மானிக்க வேண்டும்.

மலையக மக்களின்  சம்பளம் மற்றும் அடிப்படை  பிரச்சினைகளுக்கு  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான  அரசாங்கத்தினால் மாத்திரமே தீர்வு வழங்க முடியும். மலையக  மக்களின்  அடிப்படை பிரச்சினைளை சம்பள அதிகரிப்பு என்ற  விடயத்திற்குள் மாத்திரம்   உள்ளடக்க முடியாது. ஆகவே மலையக மக்கள் மாத்திரமல்ல ஒட்டுமொத்த  தமிழ் மக்கள் அனைவரும் பொதுஜன பெரமுனவிற்கு  இம்முறை ஆதரவு வழங்க வேண்டும் என்றர்.