(செ.தேன்மொழி)

நாடளாவிய ரீதியில் காணப்படும் சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளை மீள அறிவிக்கும் வரையில் பார்வையிட முடியாது என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனிய தெரிவித்தார்.

சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு தடைச் செய்துள்ளமை தொடர்பில் அவரிடம் வினவியபோது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

வெலிக்கடைச் சிறைசாலை கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து வெலிக்கடைச் சிறைச்சாலையிலுள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு தடைச்செய்யப்பட்டது.

இந்நிலையில் ஏனைய சிறைச்சாலைகளிலும் இந்த நெருக்கடி நிலைமை ஏற்பட வாய்ப்பிருப்பதனாலேயே , அனைத்து சிறைசாலைகளிலும் கைதிகளை பார்வையிடுவதற்கு தடைச் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

தற்காலிகமாகவே கைதிகளை பார்வையிட தடைச் செய்யப்பட்டுள்ளதுடன் , சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைய உரிய சுகாதார விதிமுறைகளை மேற்கொண்டு விரைவில் கைதிகளை பார்வையிடுவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். அதுவரையில் கைதிகளை பார்வையிடுவதற்கு தடைச்செய்யப்பட்டுள்ளது.