(நா.தனுஜா)

மதகுருமார்களையும், அடிப்படைவாதிகளையும் இணைத்துக்கொண்டு அரசியலமைப்பைத் தயாரித்த நாடுகளுக்கு நேர்ந்த கதியை மறந்துவிடக்கூடாது என்று கூறியிருக்கும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, அத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அவற்றை குப்பைக்கூடைக்குள் வீசியெறிவதே இலங்கையர்களின் பொறுப்பு என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டு அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மாற்றியமைக்கப்போவதாக ஆளுந்தரப்பினர் கூறிவரும் நிலையிலேயே மங்கள சமரவீர இத்தகைய கருத்தொன்றை வெளியிட்டிருக்கிறார்.

மதகுருமார்கள், தீவிரவாதிகள் மற்றும் அடிப்படைவாதிகளை இணைத்துக்கொண்டு அரசியலமைப்பைத் தயாரிப்பதில் ஈடுபட்ட நாடுகளுக்கு என்ன நடந்தது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மேலும் இத்தகைய மோசமான முயற்சிகள் அனைத்தும் வரலாற்றின் குப்பைத்தொட்டிக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதை உறுதிசெய்வதொன்றே அனைத்து இலங்கையர்களினதும் கடமையாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.