மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகிவரும் 'துக்ளக் தர்பார்' என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியிருக்கிறது.

தமிழ் திரையுலகில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்து, முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பெற்றவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'துக்ளக் தர்பார்'. இந்தப்படத்தில் விஜயசேதுபதியுடன் பார்த்திபன், கருணாகரன், நடிகைகள் அதிதி ராவ் ஹையாத்ரி, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

வசனத்தை இயக்குனர் பாலாஜி தரணிதரன் எழுத, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாள். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.

கடந்தாண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது மீண்டும் இப்படத்தின் பணிகள் தொடங்கியிருக்கிறது. 

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் இதனை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.