வவுனியா செட்டிகுளம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வளப்பு நாய் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் கிராம அலுவலகர் ஒருவரை இன்று காலை கைது செய்த பொலிசார் அவரை மேலதிக விசாரணைகளின் பின்னர் பிற்பகல் வவுனியா நீதவான் நீதி மன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

கடந்த வெள்ளிக்கிழமை மாலை செட்டிகுளம் பகுதியிலுள்ள குறித்த கிராம அலுவலகரின் வீட்டிற்குள் நுழைந்த பக்கத்துவீட்டு நாய் மீது அவர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதையடுத்து சம்பவ இடத்திலேயே வளர்ப்பு நாய் உயிரிழந்துள்ளது . 

நேற்று முன்தினம் திங்கட்கிழமை கால்நடை வைத்திய அதிகாரியின் மருத்துவ சான்றிதழ் வளர்ப்பு நாய் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு இரத்தக்கசிவு ஏற்பட்டு வளர்ப்பு நாய் உயிரிழந்துள்ளதாக பொலிசாருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்து.

இந்நிலையில் இன்று காலை இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணைகளை மேற்கொண்ட செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளின் பின்னர் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் கிராம அலுவலகரை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.

இதன் போது அவரை பிணையில் நீதிமன்றம் விடுவித்துள்ளதாகவும் குறித்த கிராம அலுவலரினால் துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்ட துப்பாக்கியை பொலிசார் நேற்று இரவு குறித்த கிராம அலுவலகரின் வீட்டிலிருந்து மீட்டுள்ளதாகவும் வளர்ப்பு நாயின் உரிமையாளர் மேலும் தெரிவித்துள்ளார் .