(இராஜதுரை ஹஷான்)

பொதுஜன  பெரமுன  ஏனைய  கட்சிகளுடன் கூட்டணியமைத்திருந்தாலும்    பாராளுமன்றத்திற்கு மொட்டு சின்னத்தின் உறுப்பினர்கள்  அதிகளவில் தெரிவு   செய்யப்பட வேண்டும் என்பதே எமது    எதிர்பார்ப்பாகும்.

பொதுத்தேர்தலில்    ஆளும் தரப்பினருடன் போட்டியிடுவதற்கு பலமான எதிர்க்கட்சியொன்று இல்லை என்ற குறை  மாத்திரமே    உள்ளது   என    ஸ்ரீ   லங்கா பொதுஜன  பெரமுனவின் ஸ்தாபகர்  பஷில் ராஜபக்ஷ  தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின்  காரியாலயத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியலில்  பிரதான கட்சியாக  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன   உள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது.  ஐக்கிய  தேசிய கட்சி,   ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி  மற்றும் தமிழ் தேசிய  கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் இன்று  பலவீனமடைந்தள்ளன.  கட்சியின்  வீழ்ச்சி நிலைக்கு கட்சி  தலைவர்களே  பொறுப்பு  கூற  வேண்டும்.  பொதுஜன  பெரமுன  மக்களால்  உருவாக்கப்பட்ட கட்சி என்பதால்  தொடர் வெற்றிகளை சந்திக்கிறது.

ஸ்ரீ லங்கா   பொதுஜன பெரமுன ஏனைய  கட்சிகளுடன்  கூட்டணியமைத்திருந்தாலும், மொட்டு சின்னத்தின் உறுப்பினர்கள் பெருமளவில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம்.   

பொதுஜன பெரமுனவிற்கு  முதலில் வாக்கினையும்  , விருப்பு வாக்கினை   மொட்டு சின்ன உறுப்பினர்களுக்கு  வழங்குவது   தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய  பொருளாதார வீழ்ச்சி,  தேசிய  பாதுகாப்பு பலவீனம் மற்றும்  போதைப்பொருள்  வியாபாரம் முன்னேற்றம் ஆகியவை   ஜனாதிபதி   கோத்தாபய ராஜபக்ஷ  ஆட்சியை  ஏற்கும் போது  இருந்த பிரதான    சவால்கள். 

எதிர்பாராத விதத்தில்  கொவிட் -19  வைரஸ் தாக்கம் செலுத்தியது. இதனையும் முறையாக வெற்றிக் கொண்டு  மக்களுக்கு    நிவாரம் வழங்கினோம். 

வீழ்ச்சியடைந்த  சிறு மற்றும் நடுத்தர  கைத்தொழில்களை மேம்படுத்த    அரச மற்றும் தனியார் வங்கிகள்  மக்களுக்கு    சலுகை  வழங்க வேண்டும் என்று   ஜனாதிபதி பல முறை குறிப்பிட்டும் அவை  எந்தளவிற்கு வெற்றிக் கண்டுள்ளது  என்பது சந்தேகத்திற்குரியது.

அனைத்து ஒப்பந்தங்களையும் மீள்பரிசீலனை  செய்ய ஜனாதிபதி  தீர்மானித்துள்ளார். எக்காரணிகளுக்காகவும் நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட மாட்டோம் என்பதை உறுதியாக குறிப்பிட வேண்டும்.