ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்துக்கான தொல்பொருள் ஆய்வு குழுவின் செயற்பாடுகளை எதிர்க்கும் அமைதிவழி போராட்டம் எதிர்வரும் சனிக்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இடம்பெறவுள்ளதாக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தொல்பொருள் ஆய்வுக்காக ஜனாதிபதி நியமித்துள்ள குழுவில் தமிழர்களோ, முஸ்லிம்களோ உள்வாங்கப்படவில்லை. ஒரு தேசிய குழுவில் தேசிய இனங்கள் இல்லாதிருப்பது பாரிய குறைபாடாகும். பேராசிரியர் பத்மநாதன், கலாநிதி சிவகணேசன், பேராசிரியர் மௌனகுரு போன்றோர் இக்குழுவில் சேர்க்கப்படாதது ஏன்?.

தமிழர்களின் நிலங்களையும் அவர்களின் இருப்புக்களையும் அழித்தொழிக்கும் செயற்பாடே இக்குழுவின் நோக்கமாகும். கிழக்கு மாகாண ஆளுநரின் ஆட்டங்களில் ஒன்றுதான் இது. அவரால் கல்குடாவில் சிங்கள பாடசாலையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச்செயற்பாட்டிற்கு தமிழ் பேசுபவர்கள் ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இதற்காக அவ்வமைப்பு ஏற்பாடு செய்துள்ள அமைதிவழி போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.