(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மீது தமிழ் முஸ்லிம் மக்கள் முதலில் நம்பிக்கை கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபர் பஷில் ராஜபக்ஷ, தமிழ்  மொழி பேசும் மக்கள் எமது வெற்றியில்   இணைந்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இடம் பெறவுள்ள  பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றிப்பெறும்.  அந்த வெற்றி  ஜனாதிபதி தேர்தலை முழுமைப்படுத்த  வேண்டும். என்பதே எமது   எதிர்பார்ப்பு. பூகோல மட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினை இலங்கை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளினால் முடியாத விடயத்தை நாங்கள்  வெற்றிக்கொண்டுள்ளோம். இதற்காகவே  மக்கள் எமக்கு ஆதரவு வழங்க  வேண்டும்.

புதிய அரசாங்கத்தில்  பல  சவால்கள் உள்ளன. பலமான அரசாங்கம்  தோற்றம்பெற்றால் மாத்திரமே  அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு  காண முடியும்.  

அத்துடன் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் வழங்குவதாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியில் எவ்வித மாற்றமும் கிடையாது. தற்போதைய உலகநடப்பு  அனைவரும் அறிந்துள்ளார்கள். தேயிலை தொழிற்துறை உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய  முடியாத நிலை  காணப்படுகிறது. 

ஆகவே புதிய அரசாங்கத்தில்  உரிய வழிமுறைகளை பின்பற்றி மலையக தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த கொடுப்பனவு   வழங்கப்படும் என்றார்.