கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் இங்கிலாந்து - மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஜோசன் ஹொல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியானது இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. 

அதன்படி இத் தொடரின் முதல் போட்டி இன்று சவுதம்டனில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

இங்கிலாந்தில் தற்போது 287,880 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் உயிரிழப்புகளும் அங்கு 44,476 ஆக பதிவாகியுள்ளது.

இந் நிலையில் கொரோனாவின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையிலேயே இங்கிலாந்து மற்றம் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையில் இத் தொடர் நடைபெறுகின்றது.

அதனால் இந்த தொடர் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

கொரோனாவின் பரவலால் தடைப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இந்த தொடரின் மூலம் 117 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. 

2 ஆவது உலக போருக்கு பின்னர் அதாவது 1946-ம் ஆண்டுக்கு பிறகு அதிக நாட்கள் கிரிக்கெட் போட்டி நடைபெறாத காலக்கட்டமாக இது அமைந்துள்ளது.

இரண்டு வாரம் தனிமைப்படுத்தப்படும் நடைமுறை, பலக்கட்ட கொரோனா பரிசோதனை என்று மருத்துவ பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டு உள்ள இரு அணி வீரர்களும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டுள்ளனர். 

களத்தில் தொடுதலை தவிர்ப்பது, சமூக இடைவெளி, அடிக்கடி கைகளை சானிடைசரால் கழுவுவது, உடலோடு உரசி கொண்டாடுவதை தவிர்ப்பது என்று வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு கருதி ரசிகர்களுக்கும் அனுமதி இல்லை.

அது மட்டுமின்றி கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக கூறி பந்தை எச்சிலால் தேய்த்து பளபளப்பாக்க ஐ.சி.சி. தற்காலிகமாக தடை விதித்து இருக்கிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 157 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 49 இல் இங்கிலாந்தும், 57 இல் மேற்கிந்தியத்தீவுகள் அணியும் வெற்றி பெற்றுள்ளன. இதேவேளை 51 டெஸ்ட் போட்டிகள் சமனிலையில் முடிவடைந்துள்ளது.