(நா.தனுஜா)

ஐக்கிய கட்சியின் வர்ணமான பச்சை நிறத்தை தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது பயன்படுத்துவதன் ஊடாக கட்சி ஆதரவாளர்களைக் குழப்புவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முயற்சிப்பதாகக் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 சஜித் பிரேமதாஸ தரப்பினர் பச்சை வர்ணத்தைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து தெளிவுபடுத்தி தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிற்கு அவர் அனுப்பிவைத்திருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பிற்கு அமைவாக அதன் வர்ணம் பச்சை நிறமாகும். அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பின்படி நீலநிறமே அதற்குரிய வர்ணமாகும்.

அவ்வாறிருப்பினும் தமது பெர்துத்தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது ஐக்கிய மக்கள் சக்தியினால் ஐக்கிய தேசியக்கட்சியின் வர்ணமான பச்சைநிறம் பயன்படுத்தப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களை குழப்பும் நோக்கிலேயே அவர்கள் பச்சை நிறத்தைப் பயன்படுத்துகின்றார்கள் என்பது தெளிவாகப் புலப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் வர்ணமான பச்சை நிறம் ஐக்கிய மக்கள் சக்தியினால் பயன்படுத்தப்படுவது எமது தேர்தல் பிரசார செயற்பாடுகளுக்குப் பாரிய இடையூறை ஏற்படுத்தியிருக்கிறது. 

ஆகவே இவ்விடயம் தொடர்பில் விரைந்து கவனம் செலுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் வர்ணத்தை ஐக்கிய மக்கள் சக்தி பயன்படுத்துவதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.