இலங்கையின் 8ஆவது (2015-2019) பாராளுமன்றத்தில் சிறப்பாக செயற்பட்ட எம். பிக்களின் வரிசையில் நுவரெலிய மாவட்டத்தில்  முதலாம் இடம் பிடித்தமைக்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜாவிற்கு விருதும் பதக்கமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வெரிட்டே ரிசேச் www.veriteresearch.org  எனப்படும் ஆய்வு நிறுவனம் நடாத்தும் manthir.lk  இணையத்தள ஆய்வு முடிவுகளின்படி கடந்த வாரம் வெளியிடப்பட்ட அறிவிப்பில் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினரும் தற்போது தேசிய பட்டியல் வேட்பாளராக பிரேரிக்கப்பட்டுள்ளவருமான எம். திலகராஜ் நுவரெலியா மாவட்டத்தில் முதலாம் இடத்திலும் தேசிய ரீதியில் 29 வது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளார்.  

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாகவும் அரசியல்வாதிகள் அனைவருமே தேர்தல் களத்தில் இருப்பதன் காரணமாகவும் விருதுவிழா நடாத்தப்படாத நிலையில் கூரியர் சேவை மூலம் அவருக்கான பதக்கமும் சான்றிதழும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

விருதினைப்  பெற்றுக் கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் கருத்து தெரிவிக்கையில், கடந்த பொதுத்தேர்தலில் 67,761 வாக்குகளை வழங்கி என்னைப் பாராளுமன்றம் அனுப்பிய நுவரெலிய மாவட்ட  மக்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவிக்கிறேன். எனக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி வெறும் எண்களாக நான் கருதவில்லை. எமது மக்களின் எண்ணங்களாகவே கருதினேன்.  

இந்த முறை என் மீதான அத்தகைய ஒரு எண்ணத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பு மாவட்ட மக்களுக்கு இல்லை.  இந்த முறை நுவரெலிய மாவட்ட தேர்தல் களத்தில் நான் இல்லாத போதும்,  பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் என்ன செய்தேன் என்பதற்கான அங்கீகாரமாக இந்த விருதினைப் பார்க்கிறேன். மாவட்ட தேர்தல் களத்தில் என்னை காணாமல் இருப்பதற்காக மனவருத்தப்படும் எனது ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு  இந்த விருது நிச்சயம் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் என நம்புகிறேன் என்றார்.

மேலும், மலையகத் தமிழர்களின் குரல் பாராளுமன்றில் ஒலிப்பதில்லை எனும் குறையை என்னால் இல்லாமல் ஆக்க முடிந்துள்ளது என்பதன் அடையாளமே இந்த விருது. அதேநேரம்  மலையகத்துக்கு கிடைத்த  அங்கீகாரமும் எனவும் எண்ணுகிறேன். 

எப்படியாவது "எம்.பி" ஆகிவிட வேண்டும்  என வெளி மாவட்டங்களில் இருந்து வந்து நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுபவர்களுக்கு  மத்தியில் சொந்த மாவட்டமான நுவரெலியாவில் இருந்து புறப்பட்டு ஒட்டுமொத்த மலையக மக்களின் குரலாகவும் பாராளுமன்றில் எனது குரல் ஒலித்தது. என்பதை மகிழ்ச்சியோடு நினைத்துப் பார்க்கிறேன். எதிர்காலத்தில் எனது மக்களுக்கான குரல் எல்லைகளை கடந்ததாக இன்னும் பலமாக ஒலிக்கும் என்றார். 

'இங்கே நான் டாக்டர் பட்டம் பெற வரவில்லை. நான் இறை தூதனும் அல்ல. எனது இலட்சியம் எல்லாமே எனது மக்களின் குரலாக ஒலிப்பதே' என ஒடுக்கப்பட்ட ஆபிரிக்க தேசத்து மக்களின் குரலாக ஐ.நா சபையில் ஒலித்த  தோமஸ் சங்காரா எனும் மேற்கு ஆபிரிக்க புரட்சியாளரின் வரிகளை மீட்டிப் பார்க்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.