செர்பியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இந்த வார இறுதியில் தலைநகரில் திட்டமிடப்பட்ட பூட்டல் நடவடிக்கை அமுல்படுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் குழுவொன்று செவ்வாய்க்கிழமை இரவு பெல்கிரேடில் உள்ள செர்பிய பாராளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுகள் அதிகரித்து வருவதால், இந்த வார இறுதியில் செர்பியா தலைநகர் பெல்கிரேடை பூட்டுவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என செர்பிய ஜனாதிபதி அலெக்ஸாண்டர் வுசிக் செவ்வாய்க்கிழமை மாலை அறிவித்தார். 

வுசிக்கின் இந்த கூற்றுக்குப் பின்னர், பெல்கிரேடின் பாராளுமன்ற வளாகத்துக்கு முன்னர் பல்லாயிரக் கணக்கானோர் கூடியினர். உள்ளூர் நேரப்படி நள்ளிரவுக்கு முன்னர் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு, ஒரு சிறிய குழு எதிர்ப்பாளர்கள் ஒரு பொலிஸ் சுற்றுவட்டாரத்தை தாண்டி, ஒரு கதவை உடைத்து பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் நுழைந்தனர். 

எனினும் பின்னர் பொலிஸார் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

அத்துடன் அரசு தொலைக்காட்சி கட்டிடத்தின் முன் பொலிஸாருடன் மோதிய போராட்டக்காரர்கள், அரசாங்கத்திற்கு பக்கசார்பாக ஊடகம் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர். 

இந்த போராட்டத்தில் ஏராளமான பொலிஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், கண்ணீர் புகை தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செர்பிய காவல்துறை பணிப்பாளர் விளாடிமிர் ரெபிக், பல ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் அதிகாரிகள் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறினார். எனினும் காயமடைந்த மற்றும் கைதானவர்களின் எண்ணிக்கையை அவர் கூறவில்லை. 

மேலும் செர்பியாவின் பல இடங்களில் இது போன்ற போராட்டங்கள் தொடர்ந்தும் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

செர்பியாவில் தற்போது உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 16,719 ஆக காணப்படுவதுடன் உயிரிழந்தவர்களின் தொகையும் 330 ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Photo Credit: twitter