யாழ். நல்லூர் கோவில் வீதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (05) இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த முதியவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.  

திருநெல்வேலியைச் சேர்ந்த சின்னத்துரை குகேந்திரன் (வயது-62) என்பவரே உயிரிழந்தவராவார்.

நல்லூர் வீதியால் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று வீதிக்கு சமீபமாக நிறுத்தப்பட்டு திடீரென கார்க் கதவு திறக்கப்பட்டமையால் பின் பக்கமாக மோட்டார்ச் சைக்கிளில் வந்த மேற்படி முதியவர் கார்க் கதவுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார்.

தலையில் பலத்த காயமடைந்த இவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுத் தீவிர சிகிச்சைப்  பிரிவில் சேர்க்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்றுமுந்தினம் மாலை உயிரிழந்தார். சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

விபத்தால் மூளையில் ஏற்பட்ட பாரிய இரத்தக் கசிவினால் மரணம் ஏற்பட்டது எனப் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்படி விபத்தை ஏற்படுத்திய நபர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனின் சகோதரரான தி.பரமேஸ்வரன் என பொலிஸார் தெரிவித்திருந்த போதிலும் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை எனத் தெரிய வருகின்றது.

சாதாரண மக்கள் மேல் பாய்கின்ற பொலிஸ் சட்டம் அரசியல் செல்வாக்குடையவர்களை விட்டு வைக்கின்றதா? என உயிரிழந்தவரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.