(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட 20,240 வியாபாரங்களுக்கு சௌபாக்யா கொவிட் - 19 மறுமலர்ச்சிக்கடன் திட்டத்தின் கீழான உதவிகளை வழங்குவதற்கு 53 பில்லியன் ரூபாவை மத்திய வங்கி ஒதுக்கீடு செய்திருக்கிறது.

கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்கு உள்ளானது. இந்நிலையில் வணிகங்கள் மற்றும் சிறிய, நடுத்தரளவு முயற்சியாளர்களுக்கு உதவும் வகையில் மத்திய வங்கியினால் புதிய கடன் வழங்கல் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அதன்படி அரசாங்கத்தின் ஆலோசனையுடன் மத்திய வங்கி கொவிட் - 19 நோய்த்தொற்றின் மூலம் மோசமாகப் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு உரிமம்பெற்ற வங்கிகள் ஊடாக 4 சதவீத வட்டியில் தொழிற்பாட்டு மூலதனத்தினை வழங்குவதற்காக சௌபாக்யா கொவிட் - 19 மறுமலர்ச்சிக்கடன் திட்டத்தினை அறிமுகப்படுத்தியிருக்கிறது. 

இது நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் புத்துயிர் பெறுவதற்கு வாய்ப்பேற்படுத்தும் என்று மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது.

இக்கடன் திட்டமானது சுயதொழில் மற்றும் தனிப்பட்டவர்கள் உள்ளடங்கலாக ஒரு பில்லியன் ரூபாவிற்குக் குறைவான வருடாந்தப் புரள்வைக் கொண்ட, கொவிட் - 19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு வழங்கப்படவிருக்கிறது.

 அதன்படி 20,240 வியாபாரங்கள் இக்கடனைப் பெறும் என்பதுடன், அதற்காக 53 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஒரு பில்லியன் ரூபா வருடாந்தப் புரள்வு மட்டுப்பாடு சுற்றுலா, ஏற்றுமதிகள் மற்றும் தொடர்புபட்ட ஏற்பாட்டுச்சேவை வழங்குதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள வியாபாரங்களுக்கு ஏற்புடையதாகாது என்றும் மத்திய வங்கி அறிவித்திருக்கிறது.