வவுனியா செட்டிகுளம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வளர்ப்பு நாய் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதில் நாய் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்து வளர்ப்பு நாயின் உரிமையாளரால் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

நேற்றைய தினம் கால்நடை வைத்தியரினால் மரண விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் அவ் அறிக்கையில் துப்பாக்கிச்சூட்டினால் வளர்ப்பு நாய் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . 

எனினும் இன்று வரையிலும் செட்டிகுளம் பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் மீது எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவே பொலிசார் பக்கச்சார்பாக நடந்து கொள்வதாக வளர்ப்பு நாயின் உரிமையாளர் தெரிவித்துள்ளார் .

இச்சம்பவம் குறித்து நாயின் உரிமையாளர் மேலும் தெரிவிக்கையில் , 

கடந்த வெள்ளிக்கிழமை எனது வளர்ப்பு நாய் பக்கத்துவீட்டுக்காரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளது . எனினும் செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் மூன்று நாட்கள் கடந்தும் இன்று வரையிலும் எவ்விதமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.

இதையடுத்து இன்றைய தினம் கால் நடை வைத்தியரினால் மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணை அறிக்கையுடன் பொலிஸ் நிலையம் சென்று அவ் அறிக்கையில் நாய் மீது எயார் துப்பாக்கியால் சூடு மேற்கொள்ளப்பட்டு நாயின் நுரையீரல் குடல்பை இரப்பையிலிருந்து துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்ட தோட்டா கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் எயார் துப்பாக்கியினால் துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டு வளர்ப்பு நாய் உயிரிழந்துவிட்டதாக மரண விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 

இச்சம்பவம் குறித்து செட்டிகுளம் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டபோதும் இச்சம்பவத்தில் தொடர்புபட்ட இரு தரப்பினரையும் சமாதானமாக செல்லுமாறு அறிவுரைகளை பொலிசார் வழங்கியுள்ளனரே தவிர வளர்ப்பு நாய் உயிரிழப்பிற்கு காரணமானவர்களுக்கு எதிராக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் செட்டிகுளம் பொலிசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் குற்றச்சாட்டினை முன்வைத்த வளர்ப்பு நாயின் உரிமையாளர் இவ்விடயம் குறித்து வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்குக் கொண்டு செல்லவுள்ளதாக செட்டிகுளம் பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட பின்னர் நாளைய தினம் காலை 9 மணிக்கு இருதரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார் .