நடிகர் லிங்கா கதையின் நாயகனாக நடித்திருக்கும்‘ தடயம் முதல் அத்தியாயம் ’,தமிழ் திரையுலகில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் ‘ரீகல் டாக்கீஸ்’ என்ற டிஜிட்டல் தளத்தில் ஜூலை 10-ஆம் திகதியன்று வெளியாகிறது.

அறிமுக இயக்குனர் மணி கார்த்திக் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘தடயம் முதல் அத்தியாயம்’. இப்படத்தில் சேதுபதி, சிந்துபாத் மற்றும் பெண்குயின் ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகர் லிங்கா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் புதுமுக நடிகர்கள் விஜய் ஆனந்த், கார்த்திகேயன் அய்யாச்சாமி, ராஜா பழனிவேல், சுரேஷ் ,மோகன் பிரதீப், கலங்கல் தினேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சுகுமாரன் சுந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில்,‘ பொலிஸ் அதிகாரியாக வரும் கதாநாயகனை சுற்றி தொடர் கொலைகள் நடைபெறுகிறது. அவர் அதனை விசாரிக்கும் போது கிடைக்கும் தடயங்கள் மூலம் கொலையாளியை நெருங்கினாரா? எதிரியின் சதியை முறியடித்தாரா? என்ற உளவியல் ரீதியான திரில்லர் திரைக்கதையாக உருவாகியிருக்கிறது. கொடைக்கானல் பின்னணியில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. திரைத்துறை மீதான ஈர்ப்பின் காரணமாக,யாரிடமும் பணியாற்றாமல் தனித்தன்மை கொண்ட ‘தடயம் முதல் அத்தியாயம்’ என்ற படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறேன்.” என்றார்.

இந்த படம் ரீகல் டாக்கீஸ் எற் டிஜிட்டல் தளத்தில் ஜுலை 10ஆம் திகதியன்று இரவு எட்டு மணியளவில் வெளியாகிறது. சைக்காலஜிக்கல் திரில்லர் ஜேனரில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஓரளவு எதிர்பார்ப்பு இருப்பதாக இணையத்தில் ரசிகர்கள் பின்னூட்டம் பதிவிட்டிருக்கிறார்கள்.