(இராஜதுரை ஹஷான்)

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு அரசியலமைப்புசார் பிரச்சினைகள் ஏதும்  கிடையாது. பொருளாதார ரீதியான பிரச்சினைகள் மாத்திரமே உள்ளன. அதிகார பகிர்வு, சமஸ்டியாட்சி ஆகிய விடயங்களை குறிப்பிட்டுக் கொண்டு  தமிழ் அரசியல்வாதிகள்  அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறார்கள்.  

இனவாதத்தை ஆயுதமாக கொண்டு பொதுஜன பெரமுன ஆட்சியை கைப்பற்றவில்லை. என   முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 சுபீட்சமாக மற்றும் பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை குறுகிய காலத்திற்குள் நிறைவேற்றியுள்ளார் . போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொலிஸார் தொடர்பான பல தகவல்கள்  தற்போது அம்பலமாகியுள்ளன.  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கைத் திட்டங்களை செயற்படுத்தும் பலமான  அரசாங்கம் தோற்றம் பெற்றால் மாத்திரமே 69  இலட்ச மக்களின்   எதிர்பார்ப்பு நிறைவேறும்.

 வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் ஆதரவு இல்லாமல் பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க முடியாது என்று  குறிப்பிடுவது தவறு. என்பதை ஜனாதிபதி தேர்தலில் நிரூபித்துள்ளோம். ஒரு  கட்சி  பாராளுமன்றத்தில் தனித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பெற்று  அரசாங்கத்தை  அமைக்க முடியாது  என்பதையும் இம்முறை  மாற்றியமைப்போம்.

  வடக்கு  மற்றும் கிழக்கு மக்களுக்கு அரசியலமைப்பு சார்  பிரச்சினைகள் ஏதும் கிடையாது.   அபிவிருத்தி சார்பான பிரச்சினைகளே காணப்படுகின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி  காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் துரிதமாக அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டன.  அக்காலக்கட்டத்தில் அப்போதைய அரசாங்கத்திற்கு  வடக்கு கிழக்கில் அரசியல் ரீதியான ஆதரவு பெரும்பாலும்  கிடையாது. அரசியலுக்கு முக்கியத்துவம்    கொடுக்கப்படவில்லை. மாறாக மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கே முக்கியத்தும் வழங்கப்பட்டது என்றார். 

மேலும், விடுதலை புலிகள் அமைப்பினை  தொடர்புப்படுத்தி  முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா  மகேஷ்வரன்  குறிப்பிட்ட  கருத்து  தற்போது  சமூக  வலைத்தளங்களில் மாறுப்பட்ட கருத்துக்களை தோற்றுவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் தேவையற்ற விடயங்களுக்கு மாத்திரமே தங்களின் அரசியல் பலத்தை பிரயோகிக்கிறார்கள். நாட்டில்  தீவிரவாதம் மீண்டும் தலைத்தூக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.