இலங்கையின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சியை ஐக்கிய தேசிய கட்சியை தவிற வேறு எந்தவொரு அரசாங்கத்தினாலும் கட்டியெழுப்பி விட முடியாது. 

எனவே வளமான எதிர்காலத்திற்கான பயணத்தை எமது வெற்றியிலிருந்து ஆரம்பிப்போம் என ஐ.தே.க வின் கேகாலை மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி லிலான் அமரகோன் தெரிவித்தார்.

கேகாலை நகரில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் குறிப்பிடுகையில் ,

தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் பல்வேறு உறுதிமொழிகளை வழங்குவார்கள். ஆனால் வெற்றிப்பெற்ற பின்னர் அனைத்தையும் மறந்து விடுவார்கள். 

அது மாத்திரமின்றி இன மற்றும் மதவாதத்தை தூண்டி விட்டு அரசியலும் செய்யவார்கள். ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்த வரையில் அனைத்து இன மக்களினதும் ஒற்றுமையை பாதுகாப்பது முதற்கடமையாகவே கொண்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில் வாழ கூடிய சிறுபான்மை இன மக்களின் உரிமைகளை பாதுகாப்பது என்பது எமது கடமையாகும். கடந்த காலங்களில் நாட்டில் பல்வேறு அமைதியின்மைகள் ஏற்பட்ட போதிலும் கேகாலையில் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பாடதவாறு இன நல்லிணக்கத்தை பாதுகாத்தோம். எனவே ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக உண்மையான நல்லிணக்கத்தையும் அபிவிருத்தியையும் நாட்டிற்கு வழங்க முடியும்.

பொருளாதார ரீதியில் வீழ்ச்சிக் கண்டுள்ள இலங்கையில் பொருளாதாரத்தை தற்போதைய அரசாங்கததினால் மீள கட்டியெழுப்ப இயலாது . வளமான எதிர்காலத்திற்கான ஆரம்பத்தை ஐ.தே.கவின் வெற்றியிலிருந்து உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.