முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் நிலையத்தினால் ஊடகவியலாளர் தவசீலன் அவர்கள் இன்று விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த  ஆணி மாதம் 16 ஆம் திகதி பேராறு பகுதியில்  வீதியில் மண் ஏற்றி  வந்த டிப்பர் வாகனம் ஒன்றை வன பரிபாலன திணைக்கள அதிகாரிகள் மறித்து சோதனையிட்டபோது, அவர்கள் மதுபோதையில் நின்றதோடு அவர்கள் யார் என்று தெரியாத நிலையில் குறித்த டிப்பர் வாகன உரிமையாளர் குறித்த இடத்திலிருந்து வாகனத்தை ஒட்Lசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றிருக்கின்றார்.

இந்நிலையில் குறித்த அதிகாரிகள் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் வருகை தந்து பொலிஸாரிடம் தாங்கள் வன பரிபாலன திணைக்களம் என தெரிவித்து குறித்த வாகனத்தை தாம் கொண்டு சென்று நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் சாரதியையும், உரிமையாளரையும் கைது செய்வதாகவும் தெரிவித்ததனை தொடர்ந்து   முள்ளியவளையில் அமைந்திருக்கின்ற முல்லைத்தீவு வட்டார வன  காரியாலய அலுவலகத்திற்கு டிப்பர் வாகனைத்தை எடுத்துச் செல்வதற்காக கோரியுள்ளனர்.

இந்நிலையில் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்கள் குறித்த அலுவலர்களது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில் சாரதியையும் உரிமையாளரையும்  வன பரிபாலன  அதிகாரிகள் தங்களது வாகனத்தில் ஏற்றியதோடு வாகனத்தை அலுவலகத்துக்கு கொண்டுவர வாகன உரிமையாளர் உடைய உறவினர் ஒருவரையும் பொலிஸார் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில்  குறித்த வாகனத்தை செலுத்தி சென்று நபர் முள்ளியவளையில் அமைந்துள்ள  முல்லைத்தீவு வட்டார வன  காரியாலயத்தில் குறித்த  டிப்பர் வாகனத்தை நிறுத்திய பின்னர் அவரை மது போதையில் நின்ற ஒரு  அதிகாரி அவர்களுடைய அலுவலகத்திற்கு உள்ளே அழைத்துச் சென்று அறையில் அடைத்து வைத்து தன் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தன்னை அழைத்துச் செல்வதற்காகவும் தன்னை பார்வையிடுவதற்காகவும்  வருகை தந்த தன்னுடைய தம்பி மற்றும் நண்பர் இருவருக்கும் அவர்களையும்  அறைக்குள் வைத்து அடித்ததாகவும் தெரிவிக்கின்றனர்

குறித்த பாதிக்கப்பட்ட நபர்கள் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருக்கின்றார்கள் குறித்த இளைஞர்கள் இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ஒரு அரச அலுவலகத்தில் பணியாற்றுகின்ற அரசு அதிகாரிகள் மதுபோதையில் நின்று தம் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டனர்.

இவர்கள் தாக்கப்பட்ட நிலையில் குறித்த அலுவலகத்துக்கு முன்னாள்  இளைஞர்கள்  ஒன்று கூடியபோது பொலிஸார் வருகை தந்து அவர்களை அவ்விடத்தைவிட்டு அகற்றியதோடு குறித்த நபர்களை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு கோரி இருந்தனர் இருப்பினும் குவிந்த இளைஞர்கள் தாங்கள் யாரும் மது போதையில் இல்லை எனவும் குறித்து அதிகாரிகள் மதுபோதையில் இருக்கின்றார்கள் அதனை சோதனை செய்து அவர்களுக்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரை கோரிய போதும் பொலிஸார் அந்த விடயத்தை உடனடியாக மேற்கொள்ள முடியாது என தெரிவித்திருந்த நிலையில் குறித்த இளைஞர்கள் மூவரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததோடு அந்த தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருந்தார்.

இதேவேளை கடந்த மாதம் 16 ஆம் திகதி இரவு வன பரிபாலன அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட  நபர்கள் மற்றும் டிப்பர் வாகனம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் நபர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு வாகனமும் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்   இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்ததை தொடர்ந்து குறித்த செய்தி சேகரிக்க வந்த ஊடகவியலாளர் தவசீலன் மீது திணைக்கள அதிகாரிகள் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் தங்கள் மீது அவதூறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்து முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக முள்ளியவளை பொலிஸார் அழைப்பு விடுத்திருந்தனர். நேற்று மாலை ஊடகவியலாளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட முள்ளியவளை பொலிஸார், ஊடகவியலாளரை இன்று காலை 10 மணிக்கு முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்தனர் இருந்தபோதும் ஊடகவியலாளர் தனக்கான அழைப்பு கடிதத்தை அனுப்புமாறு கோரிய போதும் அவர்கள் அழைப்பு கடிதத்தை அனுப்பவில்லை.

இன்று காலை  பொலிஸார் நிலையத்தினுடைய பொறுப்பதிகாரி அவர்கள் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு ஊடகவியலாளர்களை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் ஊடகவியலாளர் தற்போது முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக சென்றுள்ளார்.