நாட்டில் இனவாதம் பரப்பப்படுவதுடன் சிறுபான்மை மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடர்வதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

 மூவின மக்களும் ஐக்கியமாக வாழ வேண்டும் என்று கூறப்படுகிறதே தவிர அதற்கு மாறாகவே காரியங்கள் தொடர்கின்றன.

 இனவாதம், மதவாதம், பௌத்த பேரினவாதம் என்பன நாட்டில் பூதாகரமாக உருவெடுத்துள்ளன. இன்றைய ஆட்சியாளர்களும் தமது ஆட்சியைத் தக்கவைக்க இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி நாட்டில் சிறுபான்மை மக்களை அடக்கு முறைக்குள்  தள்ள முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

 இது ஒருபுறமிருக்க மட்டக்களப்பு வெல்லாவெளி வேற்றுச்சேனை எல்லைப்புற கிராமத்தில் விகாரை ஒன்றை அமைக்க வந்த பிக்குகளை இளைஞர்கள் விரட்டி அடித்த சம்பவம் ஞாயிறு மாலை இடம்பெற்றுள்ளது.

வேற்றுச்சேனையில் ஒதுக்குப்புறமாக உள்ள பகுதி ஒன்றினையே பௌத்த பிக்கு ஒருவர் படையினருடன் வந்து பார்வையிட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது .

குறித்த பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் இளைஞர்கள் விளையாட்டு மைதானம் ஒன்றை அமைக்க மேற்கொண்ட முயற்சி பொலிசாரின் தலையீட்டால் இடைநிறுத்தப்பட்டது. 

தேரர்களைப் பொறுத்தமட்டில் திடீர் திடீரென கிராமங்களுக்குள் புகுந்து விகாரை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன.

அண்மையில் கிழக்கு தொல்பொருள் செயலணி ஒன்று அமைக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான சட்டமீறல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இதேவேளை தமிழரின் பூர்வீக பூமியான வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் வரலாற்றை மாற்றியமைக்கும் மறைமுகத் திட்டங்களை தென்னிலங்கை  வகுத்து வருகின்றது.

ஜனாதிபதி செயலணியின் பிரதான நோக்கமும் அதுவே யாகும். இவர்களின் செயற்பாடுகளை நாம் தடுத்து நிறுத்த வேண்டுமெனில்  தமிழர்கள் அனைவரும் ஓரணியில் ஒன்றிணைய வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார் .

ஒருபுறம் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து வருவதும் மறுபுறம் தமிழர் பிரதேசங்கள் பௌத்த பிக்குகளால் கபளீகரம் செய்யப்பட்டு வருவதும் தமிழ் பேசும் மக்களை வெகுவாக பாதித்து வருகின்றது. 

சிறுபான்மை மக்களை அடக்கி ஒடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்கின்றனவோ என்ற அச்ச உணர்வு மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.

எனவே அரசாங்கம் இவ்விடயத்தில் தமிழ் பேசும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் நடந்து கொள்வது அவசியம் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்