(எம்.எப்.எம்.பஸீர்)

தான் உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் 99 பேரின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்ய அக்கட்சியின் செயற்குழு எடுத்த முடிவும், அம்முடிவு அமுல் செய்யடுவதை தடுத்து  இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிகுமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை  நிராகரித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின்  தீர்மானமும் சட்டத்துக்கு முரணானது என, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலர் ரஞ்சித் மத்துமபண்டார மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

தான் உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் 99 பேரை கட்சி உறுப்புரிமையில் இருந்து இடை நிறுத்த  அக்கட்சியின் செயற்குழு எடுத்த முடிவினை அமுல் செய்வதை தடுத்து  இடைக்கால தடை உத்தர்வொன்றினை பிறப்பிகுமாறு ரஞ்சித் மத்தும பண்டார  கொழும்பு மாவட்ட நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கை கடந்த ஜூன் 22 ஆம் திகதி  நிராகரிக்கப்பட்டது. அதற்கு எதிராக அவர் மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மேன் முறையீட்டு மனு நேற்று  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே ரஞ்சித் மத்தும பண்டார சார்பில் ஜனாதிபதி சட்டத்தணி இக்ராம் மொஹம்மட் மேர்படி விடயத்தை நீதிமன்றில் முன்வைத்தார்.

இந்த விவகாரம் குறித்த மேன் முறையீட்டு மனு, நேற்று மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றின் நீதிபதிகளான சம்பத் அபேகோன் மற்றும்  மொஹம்மட் லபார் ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேர்படி விடயம் அறிவிக்கப்பட்டது.

இதன்போது விடயங்களை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி இக்ராம் மொஹம்மட்,

' கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் செயற் குழு கூட்டத்தில்,  எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியானது கூட்டணி ஒன்றில், சஜித் பிரேமதாஸவின் தலைமைத்துவத்தின் கீழ் போட்டியிட தீர்மானம் எடுத்தது.

 அதன் பிரகாரமே ஐக்கிய மக்கள் சக்தி எனும் கூட்டணி உருவாக்கப்பட்டு, அதன் தலைமைத்துவம் சஜித் பிரேமதாஸவுக்கும், அதன் பொதுச் செயலர் பதவி ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கும்  வழங்கப்பட்டுள்ளது. அதனை உறுதி செய்ய அந்த செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற செயற்குழு உறுப்பினர்கள்  33 பேரின் சத்தியக் கடதாசிகள் வழக்குடன் இணைக்கப்பட்டுள்ளன.

அந்த செயற்குழு தீர்மானத்தின் பிரகாரம் அமைக்கப்பட்ட  ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் அறிமுக விழா கடந்த மார்ச் 2 ஆம் திகதி  தாமரைத் தடாக மண்டபத்தில் இடம்பெற்றது.  அதில் கலந்துகொள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, உப தலைவர் ரவி கருணாநாயக்க அகையோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் அவர்கள் கலந்துகொள்ளவிக்ல்லை.

 ஐக்கிய மக்கள் சக்தி களவாக அமைக்கப்பட்ட கூட்டணியல்ல.  அது ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு அனுமதியின் பிரகாரம் அமைக்கப்பட்ட கூட்டனியாகும்.  எனவே அந்த கூட்டணியின் உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்ட ஐக்கிய தேசிய கட்சியினரின் கட்சி உறுப்புரிமையை ரத்து செய்ய ஐ.தே.க. செயற்குழு எடுத்த முடிவு சட்ட விரோதமானதாகும். ' என  சுட்டிக்காட்டினார்.

 இந் நிலையில் குறித்த மேன் முறையீட்டு மனு மீது இன்று வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 7 ஆம் திகதியும் விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

முன்னதாக தான் உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் 99 பேர்,  அக்கட்சி உறுப்புரிமையில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் செயற்குழு எடுத்த முடிவினை அமுல் செய்வதை தடுத்து  இடைக்கால தடை உத்தர்வொன்றினை பிறப்பிகுமாறு ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலர் ரஞ்சித் மத்துமபண்டாரவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை  கொழும்பு மாவட்ட நீதிமன்றம் கடந்த ஜூன் 22 ஆம் திகதி  நிராகரித்தது. எனினும் இது குறித்த முறைப்பாட்டு மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதி  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மனைத்திருந்த  நீதிமன்றம் அன்றைய தினம் மன்றில் ஆஜராக,  மனுவின் பிரதிவாதிகளான ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்க,  உப தலைவர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு  நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியது.

மனுதாரர் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி இக்ராம் மொஹம்மட் முன் வைத்த வாதங்கள், பிரதிவாதிகளில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலர் அகில விராஜ் காரியவசம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரேலண்ட் பெரேரா  முன்வைத்த வாதங்களுக்கு அமைய கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி அமலை ரணவீர, இடைக்கால தடை கோரிக்கையை நிராகரித்திருந்தார்.

'  இவ்வாறான இடைக்கால தடை உத்தரவொன்றினை கோரும் போது, முறைப்பாட்டாளர் தரப்பு, உண்மையான விடயங்களை அவ்வாறே நீதிமன்றுக்கு வெளிப்படுத்தல் வேண்டும். எனினும் இந்த இடைக்கால தடையை கோரும் போது, முறைப்பாட்டாளர் தரப்பு சம்பவ விடயங்களை மறைத்து  குறித்த இடைக்கால தடையை கோரியுள்ளதாக தெளிவாகிறது. எனவே இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையை நிராகரிக்கின்றேன்.' என  மாவட்ட நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

 இந் நிலையிலேயே மாவட்ட நீதிமன்றின் தீர்ப்புக்கு எதிராக மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்துக்கு மேன் முறையீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.