பூனைகளின் அப்பச்சண்டை பற்றிய கதையை நாம் பலமுறை கேட்டிருக்கின்றோம். அப்பத்திற்கு ஆசைப்பட்ட இரு பூனைகள் தமக்கிடையே சண்டைபிடித்து அந்த அப்பத்தை பங்கிடும் பொறுப்பை குரங்கிடம் கொடுத்ததால் கடைசியில் அப்பம் எந்தப் பூனைக்கும் சரியாகக் கிடைக்காமல் போனதுதான் அந்தக் கதை.

ஆகஸ்டில் நடைபெறவுள்ள தேர்தலில் பொதுவாக தாம் போட்டியிடும் கட்சிக்காகவும், குறிப்பாக தமது  விருப்பு இலக்கத்திற்கு வாக்குச் சேர்ப்பதற்காகவும் முஸ்லிம் வேட்பாளர்கள் தமக்கிடையே சண்டையிட்டுக் கொள்வதாலும், ஆளுக்காள் தந்திரங்களை பிரயோகிப்பதாலும் கடைசியாக எவருக்குமே போதுமான வாக்குகள் கிடைக்காமல்போய் முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் குறைவடைந்து விடுமோ என்ற நியாயமான அச்சம் ஏற்படத் தொடங்கியிருக்கின்றது. 

முஸ்லிம் சமூகத்திற்கான அரசியலானது, கட்சி அரசியலாக, தலைவர்களை மையப்படுத்திய அரசியலாக, தனிநபர்களுக்கு வாழ்வு கொடுக்கும் அரசியலாக, பணத்தையும் பதவியையும் சுகிப்பதற்கான ஒரு களமாக மாற்றப்பட்டு கனகாலமாயிற்று. முஸ்லிம் தலைமைகள் மட்டுமன்றி ஒவ்வொரு அரசியல்வாதியும் தங்களது ஆதரவாளர்களின் குருட்டு நம்பிக்கைகளை தமக்கு மூலதனமாகப் பயன்படுத்தி வருகின்றனர். 

அரசியல்வாதிகள் செய்த தொடர் தவறுகள் குறித்து முஸ்லிம்கள் ஒரு சமூகமாக கேள்வி கேட்க முன்வராமல், இன்னுமின்னும் பொய்ப் பிரசாரங்களுக்கும் அவசியமற்ற உரைகளுக்கும் அதேபோன்று தமது கட்சியைச் சேர்ந்தவர்களையே நையாண்டி செய்யும் பேச்சுக்களுக்கும் மயங்கி கைதட்டி விட்டுப் போகின்ற கூட்டமாகவே இருக்க விரும்புவதால், இந்தத் தேர்தலிலும் மக்கள் வெறுமனே வாக்குப் போடும் இயந்திரங்களாகவே இருப்பரோ என எண்ணத் தோன்றுகின்றது.  

இருப்பினும் இதையெல்லாம் தாண்டி, ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில் முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களை உறுதி செய்ய வேண்டிய ஒரு வரலாற்றுப் பொறுப்பு இருக்கின்றது. அவ்வாறு தெரிவு செய்யப்படும் எம்.பி.க்களின் ‘எண்ணிக்கையில்’ மட்டுமன்றி அவர்களது ‘தரத்திலும்’ கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.  

பதவி துறந்து விட்டோம்: ஹக்கீம் ...

முஸ்லிம் பிரதிநிதித்துவம்

முஸ்லிம் கட்சித் தலைவர்களும் ஏனைய அரசியல்வாதிகளும் ஒரு சமூகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள் என்ற அடிப்படையிலேயே அவர்களது தவறுகள், சுத்துமாத்து வேலைகள், சமூகத் துரோகங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றோம். அவர்களை திருத்துவதற்கு வினையூக்கியாக இருக்க வேண்டிய வாக்காளப் பெருமக்கள் தொடர்ச்சியாக விடுகின்ற அப்பாவித்தனமான தவறுகளும் இந்த நோக்கத்திற்காகவே சுட்டிக்காட்டப்படுகின்றன. 

ஆனால் நாம் என்னதான் அரசியல்வாதிகள் மீது விமர்சனங்களை முன்வைத்தாலும், கடந்த மற்றும் அதற்கு முந்திய பாராளுமன்றங்களில் எம்.பி.க்களாக இருந்த முஸ்லிம்களில் 99 சதவீதமானோர் பாராளுமன்ற ‘கதிரைகளைச் சூடேற்றியதை’ தவிர வேறெதுவும் செய்யவில்லை என்றாலும், முஸ்லிம் சமூகம் தமக்குள்ளான உள்ளக விமர்சனப் பார்வைகளைக் கடந்து, இந்த முறை தமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயமும் இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். 

இலங்கை வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால், சுதந்திரத்திற்கு முன்னரான காலனித்துவ காலத்தின் ஆட்சிகளிலும் முஸ்லிம்கள் சொல்லிக் கொள்ளும்படியான வகிபாகத்தைக் கொண்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாக, இலங்கையின் முதலாவது பாராளுமன்றத்தில் இருந்து மார்ச் 2இல் கலைக்கப்பட்ட 15ஆவது பாராளுமன்றம் வரை ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் கணிசமான முஸ்லிம் எம்.பி.க்கள் அங்கம் வகித்தனர். 

அதுமட்டுமன்றி, சுதந்திரமடைந்த காலத்திலிருந்து ஒவ்வொரு ஆட்சியிலும் முஸ்லிம் எம்.பி.க்கள் அமைச்சர்களாக, பிரதியமைச்சர்களாக பதவி வகித்தனர். ஆனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையில் மாத்திரமே முஸ்லிம் ஒருவர் அமைச்சுப் பதவியில் அமர்த்தப்படவில்லை. இதற்கான காரண காரியங்கள் யாரும் அறியாத ரகசியங்களும் அல்ல. 

மக்காவில் ஒன்றுபட்டவர்கள் ...

கையறுநிலை அரசியல்

கடைசிப் பாராளுமன்றத்தில் ஆரம்பத்தில் 21 முஸ்லிம் எம்.பி.க்கள் இருந்தனர். அது கலைக்கப்படும் போது 2 தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் உட்பட 20 பேர் பதவியில் இருந்தனர். ஆனால் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இது வரையான நிலைமைகளை நோக்குகின்ற போது, முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறையும் என்ற அனுமானங்கள் முன்வைக்கப்படுகி;ன்றன. 

பெரும்பான்மைக் கட்சிகளின் வியூகம், முஸ்லிம் பிரதிநிதிகள் தொடர்பாக அவர்கள் கொண்டிருக்கின்ற கொள்கை, முஸ்லிம் கட்சிகள் இம்முறை வகுத்துள்ள சூத்திரங்கள், உட்கட்சி வேட்பாளர்களுக்கு இடையிலான ஒத்துழையாமை, பெரும்பான்மைக் கட்சிகளில் களமிறங்கியுள்ள முஸ்லிம் வேட்பாளர்களின் வாக்கவங்கி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே முஸ்லிம் எம்.பி.க்களின் எண்ணிக்கை குறையலாம் என்ற அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

இலங்கையில் முஸ்லிம் வாக்குகள் அதிகரித்துள்ளனவே தவிர குறைவடையவில்லை. கடந்த 2015 தேர்தலில் வாக்களித்தவர்களை விட இம்முறை அதிகமானோர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். ஆயினும், மக்களிடம் எதைச் சொல்லியும் வாக்குக் கேட்க முடியாத கையறுநிலை முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டிருக்கின்றது. ‘நாங்கள் இந்த உரிமையை பெற்றுத் தந்தோம், இந்த பாரிய அபிவிருத்தியை வெற்றிகரமாக நிறைவு செய்தோம்’ என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்ல முடியாத பெரும் தர்மசங்கடம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது எனலாம். 

இவ்வாறு, மக்கள் வேண்டிநின்ற சேவைகளை முஸ்லிம் தலைவர்கள் மற்றும் தளபதிகள் உள்ளடங்கலாக அனைத்து எம்.பிக்களும் செய்திருப்பார்களாயின், மிக இலகுவாக மக்களின் மனங்களை வென்றிருக்க முடியும். வாக்குகளைப் பெறுவதற்காக பிரச்சார மேடைகளில் ‘தோப்புக்கரணம்’ போட வேண்டிய தேவையும் ஏற்பட்டிருக்காது. 

ஆனால், அப்படி எந்த அபூர்வங்களும் கடந்த 10 வருடங்களுக்குள் கணிசமான முஸ்லிம் எம்.பி.க்களால் நிகழ்த்தப்படவில்லை. எனவே இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்றாற் போல் இம்முறை வியூகங்களை வகுக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு வகுக்கப்படும் வியூகங்கள் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள், பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் ஆகியவற்றைக் காப்பாற்றுவதற்கான நோக்கோடு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். 

Daily Mirror - Sri Lanka Latest Breaking News and Headlines ...

கௌரவப் போர்

துரதிர்ஷ்டவசமாக அப்படியான தன்மைகளைக் காண முடியவில்லை. முஸ்லிம் கட்சிகள் தமக்குள் யார் அதிக எம்.பி.யை பெறுவது என்று ஒரு கௌரவச் சண்டையில் களமிறங்கியுள்ளன. ஆக கட்சிகளுக்காகவும் தலைவர்களின் விருப்பு வெறுப்புகளுக்காகவும் தனிப்பட்ட வேட்பாளருக்காவும் சூத்திரங்கள் தயாரிக்ப்பட்டுள்ளனவே தவிர, முஸ்லிம் சமூகத்தை மனதில் வைத்து வியூகம் வகுக்கப்பட்டதாக பொதுவில் திருப்தி கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது. 

மக்கள் சந்திப்புக்களில், சிறு கூட்டங்களில் சில முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பேசுவதற்கு எதுவும் இல்லாத நிலையில் மக்களைச் சிரிப்பூட்டுவதற்காகவே காமடித்தனமாக பேசுகின்றனர். சில வேட்பாளர்கள், அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டால் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை. அந்தளவுக்கு சிறுபிள்ளைத்தனமாக இருக்கின்றது. 

ஆளுக்கொரு முகநூல் தொலைக்காட்சிகளின் ஊடாகவும், வேறு வழிகளிலும் அரசியல்வாதிகள் காட்டுகின்ற புள்ளிவிபரங்களை கண்மூடித்தனமான ஆதரவாளர்கள் வேண்டுமென்றால் நம்பலாம். ‘ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து உறுப்பினர்களையும் எமது கட்சிதான் வெல்லும’; என்று சொன்னாலும் நம்புவதற்கு தயாராக இருக்கின்ற அரசியல் பக்தர்கள் கைதட்டி ஆரவாரம் செய்யலாம். தலைவரின் வியூகம் பிழைக்காது என அறிவிலித்தனமான ஆதரவாளர்கள் நம்பலாம். 

அதுவல்ல  இங்குள்ள பிரச்சினை! யதார்த்தபூர்வமாக முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் ‘எல்லாப் பக்கங்களிலும்’ உறுதி செய்யப்படுவதற்கான அணுகுமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதாகும். கட்சிக்காக, ஊருக்காக, ஒரு தனிப்பட்ட வேட்பாளரை வெல்ல வைக்க வேண்டும் என்பதற்காக அல்லது மாற்றுக் கட்சியில் குறிப்பிட்ட ஒரு நபரை தோற்கடிக்க வேண்டும் என்ற மனக் கணக்கின் அடிப்படையில் செயற்படாமல் ஒரு சமூகம் என்ற அடிப்படையில் முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த தேர்தலை கடந்து செல்ல வேண்டியுள்ளது. 

முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒரு விதமான வியூகமும், தென்னிலங்கை மற்றும் மலையகப் பகுதிகளில் வேறுவிதமான அணுகுமுறைகளும் கையாளப்படுவது அவசியம். தென்னிலங்கையில் தம்மைச் சூழவுள்ள நிலைமைகளை கருத்திற் கொண்டு முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கோ அல்லது இனவாதமற்ற சிங்கள, தமிழ் வேட்பாளர்களுக்கோ வாக்களிப்பதே முஸ்லிம்களுக்கு நல்லது. 

மூன்றில் இரண்டு பங்கான தென்னிலங்கை முஸ்லிம்கள் முஸ்லிம் மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் உசுப்பேற்றல்களுக்குப் பின்னால் போய் தமது இருப்பை கேள்விக் குறியாக்கிக் கொள்ளத் தேவையில்லை. ஆனால், வடக்கு, கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் நிலை அவ்வாறானதல்ல. முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை உறுதி செய்ய வேண்டிய பாரிய பொறுப்பை மூன்றில் ஒருபங்கான வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு உள்ளது. 

முஸ்லிம்களுக்கான அரசியலின் ...

மேலும் பிளவு

சமூகம் என்ற அடிப்படையில் சிந்தித்து, எந்த முஸ்லிம் கட்சிக்கு எந்த இடத்தில் வாய்ப்பு உள்ளதோ அந்தக் கட்சிக்கு மற்றைய முஸ்லிம் அணி அங்கு விட்டுக் கொடுப்பை செய்யும் வியூகத்தையே உண்மையில் வகுத்திருக்க வேண்டும். அதைச் செய்வதற்கும் அவர்கள் தவறிவிட்டார்கள். இதை பெரிய வியூகம் என்று அவர்கள் சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கின்றது. 

இரு கட்சிகள் ஒன்றுடன் ஒன்று முட்டிமோதி வாக்குச் சண்டை பிடிப்பது ஒருபுறமிருக்க, இப்போது ஒரு கட்சிக்குள்ளேயே விருப்பு வாக்குகளை மையப்படுத்திய அப்பச் சண்டைகள், குத்துவெட்டுக்கள், ஒத்துழையாத தன்மைகள் மேலெழத் தொடங்கியிருப்பதை நன்றாக அவதானிக்க முடிகின்றது. இது நாம் மேற்சொன்ன இலக்கை அடைவதற்கு பெரும் தடைக்கல்லாக இருக்கும் என கணிக்க முடிகின்றது. 

முன்னர் ஒரு காலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மைக் கட்சிளுக்கு அல்லது தமிழரசுக் கட்சிக்கு வாக்களித்தனர். பின்னர் பெருந்தேசியக் கட்சிகளுக்கும் பிரதான முஸ்லிம் கட்சிக்கும் இடையிலான போட்டா போட்டி காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாற்று முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலான நீயா – நானா போட்டி உருவாகியிருக்கின்றது. இப்போது இதனையெல்லாம் தாண்டி, ஒரே கட்சிக்குள்ளேயே போட்டா போட்டி நிலை ஏற்பட்டிருக்கின்றது. 

முஸ்லிம் கட்சிகள் சார்பான வேட்பாளர்களில் யாருடைய வெற்றியும் நிச்சயிக்கப்பட்டதாயில்லை. பலர் தோற்போம் என்று தெரிந்து கொண்டே போட்டியிடுகின்றார்கள். வேட்பாளர்களுக்கு இடையில் யாரும் அதிக விருப்பு வாக்குகள் பெறுவார்கள் என்று அடித்துக் கூற முடியாத நிலை காணப்படுவதால், காலுக்கு கீழால் ரகசியமாக ஆளுக்காள் குழிபறிக்கின்ற கேடுகெட்ட அரசியல் பிரசார திட்டங்கள் தீட்டப்படுகின்றன.  

முன்னரெல்லாம், சகோதர இனத்தைச் சேர்ந்த வேட்பாளருக்கு, அயல் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல்வாதிக்கு முஸ்லிம்கள் வாக்களித்த வரலாறு உள்ளது. ஆனால், இப்போது ஆளுக்கொரு கட்சி உருவாகி விட்டது. முஸ்லிம் கட்சிகள் மக்களை துண்டங்களாக்கி வைத்திருப்பது மட்டுமன்றி ‘ஊருக்கொரு எம்.பி. வேண்டும்’ என்ற கோஷமும் தூக்கிப் பிடிக்கப்படுகின்றது. இதுதான் இந்ந இழிநிலைக்கான அடிப்படைக் காரணமாகும். 

முஸ்லிம் கட்சிகள் நிபந்தனையுடனே ...

ஏகப்பட்ட வேட்பாளர்கள்

இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ‘சுப்பர் ஸ்டார்கள்’, ‘சகலகலா வல்லவன்கள்’, ‘ராமராஜன்’ முதல் ‘நம்பியார்’ வரை பல ரகமானோர் களமிறக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் புதுமுகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி, தாம் போட்டியிடும் சின்னத்திற்கும், பிரதான வேட்பாளர்களுக்கும் வாக்குக் சேகரிக்கும் நோக்கில் ‘போடுகாய்களாக’ சில வேட்பாளர்களும் இத்தேர்தலில் களத்தில் தள்ளிவிடப்பட்டுள்ளமை வெள்ளிடைமலை. 

தென்னிலங்கையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆனால், வடக்கு கிழக்கில் குறைந்தது நான்கு முஸ்லிம் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. பொதுஜனப் பெரமுண, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, தேசிய மக்கள் சக்தி போன்ற பெரும்பான்மைக் கட்சிகள் நேரடியாகவும் வேட்பாளர்களை களமிறக்கியிருக்கின்றன. ‘தப்பித்தவறி இடறி விழுந்தாலும் ஒரு வேட்பாளர் மீதுதான் விழுவோம்’ என்பது போன்ற நிலையுள்ளது. 

சில முஸ்லிம் பிரதேசங்களில் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை என்றாலும் பல ஊர்களில் வேட்பாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர். அவற்றுள் நான்கு வேட்பாளர்கள் உள்ள பிரதேசங்களும் உள்ளன. அதேபோன்று ஒரே கட்சியைச் சேர்ந்த இரு வேட்பாளர்கள் ஒரே ஊரில் நிறுத்தப்பட்டுள்ளதையும் காண முடிகின்றது. முஸ்லிம்களின் வாக்குகள் எந்தளவுக்கு சிதறுண்டு, குரங்கு அப்பம் பிரித்தது போல யாருக்கும் பயனற்றுப் போய்விடும் என்பதை விளங்கிக் கொள்வதற்கு இதுவே போதுமானது. 

உட்கட்சி குத்துவெட்டு

இந்தப் பின்னணியிலேயே, விருப்பு வாக்குகளுக்கான அப்பச்சண்டை தொடங்கியிருக்கின்றது எனலாம். ஒரு குறிப்பிட்ட கட்சி அதிகமான வேட்பாளர்களை ஒரு மாவட்டத்தில் களமிறக்குவதில் சிக்கலும் இருக்கின்றது. அதேபோல், அனுகூலங்களும் ஏற்படலாம். குறிப்பாக, மாற்றுக் கட்சிகளுடன் பலமான போட்டி நிலவுகையில் பல பிரதேசங்களில் வேட்பாளர்களை நிறுத்துவதன் காரணமாக சில ஆயிரம் வாக்குகளையாவது வசப்படுத்திக் கொள்ள வாய்ப்புக் கிடைக்கும். 

அந்த அடிப்படையில் இந்த வியூகம் சரியானதெனக் கூறலாம்;. ஆனால், வேட்பாளர்களிடையே ஒற்றுமையின்மையும், ஒத்துழையாமையும், ஒருவருக்கு ஒருவர் வெட்டுக்குத்துக்களை மேற்கொள்ள முனைவதுமே இந்த வியூகமானது எதிர்பாராத பெறுபேறுகளை பெற்றுத் தரும் நிலைக்கு இட்டுச் செல்லலாம் 

கடந்த பாராளுமன்றத் தேர்தல்களை விட இந்த முறை தேர்தலில் வெற்றி பெறுவது மிகக் கடினமான காரியமாகும். அந்தளவுக்கு போட்டியும் பாதகமான களநிலைமையும் இருக்கின்றது. இந்நிலையில், அநேகமான முஸ்லிம் வேட்பாளர்கள் கட்சிச் சின்னத்திற்கும் தங்களது விருப்பு இலக்கத்திற்கு மட்டும் வாக்களிக்குமாறே பிரச்சாரம் செய்கின்றனர். சிலர் தமக்கும் அந்தக் கட்சியின் தலைவர் அல்லது முக்கிய வேட்பாளர் ஒருவருக்கும் புள்ளடியிடுமாறு மக்களிடம் கோருகின்றனர். 

வேறு சிலர் இன்னும் ஒருபடி மேலே போய், அதே கட்சியில் போட்டியிடும் சகோதர வேட்பாளருக்கு விருப்பு வாக்குகளை அளிக்கக் கூடாது என்று ரகசியமாகச் சொல்வதுடன், ஒரே கட்சியின் வேட்பாளர்கள் பக்கத்து ஊருக்கு வாக்குக் கேட்டுச் செல்வதையும் அந்த ஊரில் உள்ள அதே கட்சியின் மற்றைய வேட்பாளர் விரும்புவதாகத் தெரியவில்லை. இப்படியான கைகங்கரியங்களுக்கான காரணங்கள் யாரும் அறியாததுமல்ல.

பின்னாலுள்ள ஆபத்து

முன்னாள் எம்.பி.க்கள் உள்ளடங்கலாக, புதுமுகங்கள் வரை யாருக்கும் வெற்றி நிச்சயிக்கப்படவில்லை என்ற நிலையில், ‘நம்மை விட அவர் அதிக விருப்பு வாக்குகளை பெற்று எம்.பி.ஆகிவிடுவாரோ’ என்ற உள்ளச்சமே இதற்குப் பின்னாலுள்ள அடிப்படைக் காரணமாகும். இதனால் குறிப்பிட்ட கட்சிக்கு அல்லது சின்னத்திற்கு அதிக வாக்குகள் கிடைத்தாலும் வேட்பாளர்களுக்கு குறைந்தளவான விருப்பு வாக்குகளே கிடைக்க வழிகோலும். 

அது, அக்கட்சி தனித்து போட்டியிடும் மாவட்டமாக இருந்தால் பிரச்சினையில்லை. ஆனால், அங்கு அதே கட்சியில் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்கள் குறைந்த எண்ணிக்கையில் போட்டியிட்டு, அவர்கள் திட்டமிட்ட அடிப்படையில் தமக்கிடையில் மாறி மாறி விருப்பு வாக்குகளை போடுவார்களாயின், முஸ்லிம்கள் அதிக வாக்குகளைக் குறித்த கட்சிக்கு அளித்தாலும் விருப்பு வாக்குச் சண்டையால் ஆசனங்கள் கைநழுவி, சிங்களவர் வசமாகும் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். 

முன்னொரு காலத்தில், முஸ்லி;ம்கள் செறிவாக வாழும் பகுதிகளில் பக்கத்து ஊர் வேட்பாளர்கள் பரஸ்பரம் மாறி மாறி வாக்களித்து தமது ஆசனங்களை உறுதிப்படுத்தினர். ஆனால், இன்று பெரும்பான்மைக் கட்சிகளுக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கும் இடையே முரண்பாடு, முஸ்லிம் கட்சிகளுக்கு இடையிலான போட்டி என்ற தொடரில், ஒரே கட்சிக்குள்ளேயே போட்டா போட்டியும், குழிபறிப்புக்களும் இடம்பெறும் கீழ்த்தரமான நிலை ஏற்பட்டிருப்பது ஆரோக்கியமானதல்ல. 

எனவே, இந்த சிறுபிள்ளைத்தனமான அரசியல் நகர்;வுகள் குறித்து முஸ்லிம் தலைவர்கள் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும். ‘தலைவர்கள் வகுப்பதெல்லாம் வெற்றிகரமான வியூகங்களாகவே இருக்கும்’ என்று முஸ்லிம் மக்கள் கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிராமல், சிந்தித்து செயற்படுவதுடன், ‘தரமான’ முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்தும் விதத்தில் வாக்களிக்க வேண்டும். 

-ஏ.எல்.நிப்றாஸ்