(எம்.மனோசித்ரா)

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தாது அரசியல், பொருளாதார, சமூக பாதுகாப்பை ஸ்திரப்படுத்த முடியாது. தேசிய பாதுப்பிற்கான வலிமை முப்படை மற்றும் பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புபடையினரிடமே காணப்படுகிறது. எனவே நவீன போர் தளபாடங்கள்,  உபகரணங்கள் மற்றும் நவீன பயிற்சிகளுடன் மிகப் பலம் பொருந்திய பாதுகாப்பு வேலைத்திட்டத்தை உறுவாக்குவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசார கூட்டங்களை ஆரம்பிக்கும் வைபவம் இன்று திங்கட்கிழமை சோலிஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த சஜித் பிரேமதாச மேலும் கூறுகையில்,

Image may contain: 8 people, people standing and indoor

நாடு முகங்கொடுக்கின்ற புதிய சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக புதிய பாதையை தேர்ந்தெடுத்துள்ளோம். தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் எமது பிரதான கொள்ளை ' நேர்மையான தேசியவாதம் ' ஆகும். நேர்மையான தேசிய வாதத்தின் மூலம் அனைவரையும் வெற்றியடையச் செய்வதற்கான பயணத்தின் முதற்படியை இந்த தேர்தலின் மூலம் ஆரம்பித்துள்ளோம். இலங்கை சிங்கள பௌத்தர்களை அதிகமாகக் கொண்ட நாடாகும். பௌத்த மதத்திற்கு அரசியலமைப்பில் விஷேட இடம் வழங்கப்பட்டுள்ளது. அதனை பாதுகாத்துக் கொண்டு ஏனைய இனங்களையும் மதங்களை பாதுகாக்க வேண்டிய தேசிய பொறுப்பும் கடமையுமாகும் என்று அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது.

நேர்மையான தேசியவாதம் என்ற எமது வேலைத்திட்டத்தின் கீழ் இனவாதம் , மதவாதம் , அடிப்படைவாதம் , பயங்கரவாதம் என்பவற்றை முழுமையாக எதிர்ப்பதோடு மாத்திரமின்றி , எமது தாய் நாட்டிற்குள் அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாமலிருப்பதற்கு நாம் பொறுப்பேற்றுக் கொள்கின்றோம். நேர்மையான தேசிய வாதத்திற்குள் நேர்மையாகவும் உண்மையாகவும் சரியான சிந்தனையினூடாக எமது நாட்டுக்குள் தேப்பற்று , நாட்டையும் இனங்களையும் நேசிக்கும் தன்மை, வேறு எந்த இனம் அல்லது மதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் ஒன்றிணைந்த ஆட்சிக்குள் தேசிய பாதுகாப்பைப் பாதுகாத்து சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்துடன் நாட்டை பாதுகாக்கும் புதிய பாதையே நேர்மையான தேசியவாதம் ஆகும்.

இதற்குள் பொருளாதார சௌபாக்கியம் , சமூக பலம் , அரசியல் சிவில் உரிமைகள் , மத கலாசார உரிமைகள் பாதுகாப்பதற்கு நாம் முன்னின்று செயற்படுவோம். நேர்மையான தேசிய வாத்திற்குள் வெறுக்கத்தக்க அரசியல் அதே போன்று வெறுக்கத்தக்க பேச்சு என்பன முழுமையாக நிராகரிக்கப்படும். அவ்வாறான வெறுக்கத்தக்க அரசியல் மற்றும் கருத்துக்களை வெளியிடுவது சட்ட விரோத செயற்பாடுகளாக அடையாளப்படுத்தப்பட்டு அவற்றில் ஈடுபடுவோர் சடத்தின் முன் நிறுத்தப்படுவர்.

குறிப்பாக எமது நாட்டின் தேசிய பாதுகாப்பு பற்றி பேசும் போது இராணுவ பாதுகாப்பே முதன்மைப் பெறுகின்றது. இராணுவப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக நாட்டைப் பாதுகாக்கின்ற முப்படையினர் , பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளை ஆரோக்கியமான மனநிலை, நாட்டைப் பாதுகாப்பதற்கு தேவையான நவீன போர் தளபாடங்கள் , நவீன உபகரணங்கள் அதே போன்று நவீன பயிற்சிகளுடன் மிகப் பலம் பொருந்திய பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நாம் உறுவாக்குவோம்.

தேசிய பாதுகாப்பு என்பது முப்படையினர் பொலிஸாருடைய பாதுகாப்பு மாத்திரமல்ல. நாம் நாடு என்ற அடிப்படையில் பொருளாதார பாதுகாப்பு , அரசியல் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு என்பவை தொடர்பிலு கவனம் செலுத்த வேண்டும். தற்போது நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியழைந்துள்ளது. அதனை மீளக் கட்டியெழுப்ப வேண்டும். புதிய பொருளாதார வழிமுறைகளை உபயோகித்து ஏனைய நாடுகளை விட முன்னிலை வகிக்க வேண்டும். அனைவருக்கும் சௌபாக்கியம் கொண்ட நாட்டை ஸ்தாபிப்பதற்கு நேர்மையான தேசிய வாதத்தில் புதிய பயணத்தை ஆரம்பித்துள்ள எமக்கு பொது மக்கள் சக்தியளிக்க வேண்டும். மக்கள் எம்முடன் கைகோர்க்க வேண்டும் என்றார்.