பாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன், வயது மூப்பு காரணமாக புதுச்சேரியில் இன்று காலமானார். அவருக்கு வயது 92.

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகனும், முதுபெரும் தமிழறிஞரும், விடுதலைப் போராட்ட வீரருமான மன்னர் மன்னன் என்கிற கோபதி, புதுச்சேரி வானொலி நிலையத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

ஏறத்தாழ 50 நூல்கள் எழுதியுள்ள மன்னர் மன்னன், புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் தலைவராக பல ஆண்டுகள் பொறுப்பிலிருந்து, அதற்கு சொந்த கட்டடம் கட்டித் தந்தார்.

தமிழக அரசின் திரு.வி.க விருது, கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார்.

வயது மூப்பின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் குன்றி இருந்த மன்னர் மன்னன், இன்று (6ம் திகதி) மதியம் 2.30 மணிக்கு காலமானார்.

அவரது இறுதிச் சடங்கு, புதுச்சேரி காந்தி நகரில் நாளை (7ம் திகதி) மாலை 4 மணிக்கு நடைபெறும்.