(எம்.எம்.சில்வெஸ்டர்)

எமது நாட்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அனைத்து மதங்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உண்டு எனவும், தற்போது நாட்டில் பெளத்த தர்மம் இல்லை எனவும் ‘ஒக்கொம வெசியோ ஒக்கொம ரஜவரு’ கட்சியின் பொருளாளரும் தேசிய அமைப்பாளருமான ஹர்ஷ அல்விஸ் தெரிவித்தார்.

கொழும்பு, கிரேண்ட்பாஸிலுள்ள ஸென் ஸென் ஹோட்டலில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“எமது கட்சியின் பிரதான நோக்கமானது தன்னைத் தானே கட்டுப்படுத்தி ஆளவேண்டும். தன்னைத் தானே கட்டுப்படுத்த முடியாமல் போனதாலேயே கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்று எனும் உயிர்கொள்ளும் நோய் தோன்றியது. நாம் முறையாக எம்மைக் கட்டுப்படுத்தியிருந்தால் கொரோனா வைரஸை பரவுதலை கட்டுப்படுத்தியிருக்கலாம்.

எமது கட்சியின் சின்னம் சேமிப்பு உண்டியல் ஆகும். அதாவது, நாம்  எதிர்காலத்தில் எமக்கு தேவையானவற்றை செய்வதற்கு இப்போதிலிருந்தே சிறிது சிறிதாக செய்ய முயற்சிக்கிறோம். எமது தலைவருக்கு அவரது தந்தை  சேமிப்பு பழக்கத்தை உருவாக்கியதால், தான் சேமித்த பணத்திலிருந்து தேவையானவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் கொப்பிகளை வழங்கி உதவி புரிவார். அதன் அடையாளமாகவே சேமிப்பு உண்டியலை எமது சின்னமாக வைத்துள்ளோம். நாம் இம்முறை கண்டி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் போட்டியிடுகின்றோம்.

எமது நாட்டில் பிரேமதாச, சந்திரிக்கா, மஹிந்த போன்றோர் ஆண்டனர். இவர்கள் அனைவரும் நாட்டுக்கு ஏதேனும் நன்மைகளை செய்துள்ளனர். தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுக்கு புதுமுகங்களை அனுப்ப மக்கள் விரும்பிகின்றனர். பழையவர்கள் பாராளுமன்றில் அமர்ந்திருந்தது போதும் என்று நினைக்கிறார்கள். ஜனாதிபதியும் புதிய முகங்களை விரும்புகிறார்.

எமது நாட்டில் பல இனத்தவர்கள், மதத்தவர்கள் வாழ்கிறார்கள். இவர்களை பாதுகாத்து வழிநடத்த வேண்டியது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் பொறுப்பாகும். எமது நாட்டுக்கு சிறந்த ஆட்சியை நடத்திச் செல்லும் எவரேனும் ஒருவருக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.

இந்நாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்களுக்கு என பொதுவான தலைவர் ஒருவர் இல்லை.  எங்களிடம் சில பிரச்சினைகளை வைத்துக்கொண்டு, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பேசுவதில் பிரயோசனமில்லை. இவ்வாறு பேசுவதால் என்றை தவறாக நினைக்காதீர்கள். நான் சிறந்த பெளத்தன் ஆவேன்.

ஆனாலும் தற்போது நாட்டில் பெளத்த தர்மம் இல்லை. எமது நாட்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அனைத்து மதங்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உண்டு ” என்றார்