(இராஜதுரை ஹஷான்)

சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு விதித்துள்ள பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பாடசாலைகளில் முழுமையாக    கடைப்பிடிப்பது மாணவர்களின் கடமையாகும், கல்வித்துறையில் எழுந்துள்ள சவால்களை அனைவரும் ஒன்றினைந்தே வெற்றிக்  கொள்ள  வேண்டும் என    கல்வியமைச்சர்  டலஸ் அழகப் பெரும தெரிவித்தார்.

 கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் நான்கு மாத  காலமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் இன்று முதற்கட்டமாக  மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டன.  சுகாதார  அறிவுறுத்தல்களை பின்பற்றி பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும பாடசாலைகளுக்கு  சென்று  பார்வையிட்டார். 

இதன் போது ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 பாடசாலைகளின்  கற்றல் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதை  அவதானிக்க  நாடுதழுவிய ரீதியில்  கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளடங்கிய 200 குழுவினர்  ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.சுகாதார அமைச்சின் சுற்றறிக்கை  மற்றும் கல்வி அமைச்சு வெளியிட்ட விசேட சுற்றறிக்கை  ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும்  பாடசாலைகளில் முறையாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. எந்த பாடசாலையும் பொறுப்பற்ற விதமாக செயற்பட்டதாக இதுவரையில் எவரும்   முறைப்பாடளிக்கவில்லை.

கொவிட்-19 வைரஸ தாக்கத்தினால் பாடசாலைகள் மூடப்பட்டு  மாணவர்கள் வீடுகளில் இருந்த போதும்,  அவர்களின் பாதுகாப்பினை அரசாங்கம் உறுதிப்படுத்தியது. தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் மீண்டும் மிக அவதானமான முறையில்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு  மற்றும் சுகாதார  தரப்பினருக்கு அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

மாணவர்கள் விடுமுறையில் இருந்த காலத்தில் வீடுகளில்  இருந்தவாறு நவீன தொழினுட்ப முறைமையின் ஊடாக   மாணவர்களின்  கற்றல் நடவடிக்கைகளை வலுப்படுத்திய பெற்றோரது செயற்பாடுகள் வரவேற்கத்தக்கன. மாணவர்களின் கற்றல் நடவடிக்கை நேர அட்டவனையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளன.  இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோல்  நெருக்கடிக்குள்ளாகுவார்கள் என்பதை நன்கு அறிவோம். எதிர்காலத்தில்   ஏற்படவுள்ள கல்வி சார் சவால்களை வெற்றிக் கொள்ள வேண்டுமாயின் ஒரு சில தியாகங்களை  செய்வது கட்டாயமாகும்.

 ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரது ஆலோசனைகளுக்கு அமையவே  பாடசாலை மீள திறக்கப்பட்டுள்ளன.  உயர்தர பரீட்சையை  நடத்துவதற்கு  தீர்மானித்த திகதி செப்டம்பர் மாதம் 7ம் திகதி வரை  பிற்போடப்பட்டுள்ளது.  பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதுடன்  அதிபர்,  ஆசிரியர்கள் , பெற்றோர்  மற்றும்  மாணவர்கள் ஆகியோரது  கருத்துக்களை  ஆராய்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்படும்.