விபத்து உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களால் இறப்பவர்களின் உடல்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொண்டு உடல்களை மீளவும் உறவினர்களிடம் கையளிப்பதில் தாமதம் ஏற்படுத்தப்படுவதாக பொதுமக்கள் கவலை  தெரிவித்துள்ளனர்.

 அண்மைக்காலமாக கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகத்தின் அசமந்த போக்கின் காரணமாக அகால மரணமடைந்தவர்கள்  உள்ளிட்ட  உடற்கூராய்விற்கு  உட்படுத்தப்பட வேண்டியவர்களது சடலங்கள் காலம் கடத்தப்பட்டே கையளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

கடந்த இரண்டு தினங்களுக்குள் இவ்வாறு மரணமடைந்த நான்கு சடலங்கள் உறவினர்களிடம் வழங்கப்படாமல், இழுத்தடிக்கப்படுவதாக உறவினர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து உறவினர்களுக்கு உதவவேண்டிய வைத்தியசாலை நிர்வாகம் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்துகின்றமை தங்களை மேலும் மனவேதனைக்கு உள்ளாக்குவதாகவும் பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில்  கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் ராகுலனிடம் தொடர்பு கொண்டு வினவிய போது,  உடற்கூற்று பரிசோதனையின் பின் உடல்களை உறவினர்களிடம் கையளிப்பதில் வைத்தியசாலை பக்கத்தில் எவ்வித தாமதமும் ஏற்படுவதில்லை. மாறாக பொலீஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளில் ஏற்படுகின்ற தாமதமே காரணம் எனவும் குறிப்பிட்டார்.