லோக் சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி சந்தித்த படுதோல்விக்கு பொறுப்பேற்றுக்கொண்டு தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி முறைப்படி விலகி ஒரு வருடம் கடந்துவிட்ட பின்னரும் பெரும்பாலான பிரச்சினைகளில் கட்சியின் நிலைப்பாட்டை அவரே தொடர்ந்தும் வடிவமைக்கிறார்.

காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தாயார் சோனியா காந்தியே இருக்கின்ற போதிலும், எதிர்வரும் பீஹார் மாநில சட்டசபைத்தேர்தல் குறித்து ஆராய்வதற்காக அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வீடியோ மூலமான கூட்டம் தொடங்கி இந்திய -- சீன முறுகல்நிலை, கொவிட் --19 தொற்றுநோயின் விளைவான நெருக்கடியைக் கையாளுதல் மற்றும் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு என்று முக்கிய பல பிரச்சினைகள் தொடர்பாக மோடி  அரசாங்கத்தின் மீதான தாக்குதல்களைத் தொடுப்பது வரை ராகுலே முன்னின்று செயற்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

 " எமது தலைமைத்துவப் பிரச்சினைக்கு கொவிட் ஒரு இடை ஓய்வைக் கொடுத்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.நாங்கள் ஒரு பெரிய தேசியக்கட்சி.முழுநேர கட்சித்தலைவர் ஒருவரை நாம் கொண்டிருக்கவேண்டும் என்பது எமக்கு நன்றாகவே தெரியும்.சாத்தியமானளவு விரைவாக தலைவர் ஒருவரை தெரிவுசெய்யும் நடைமுறைகளை நாம் பூர்த்திசெய்வோம். அன்னை சோனியா காந்தியும் அது குறித்தே சிந்தித்துக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன் " என்று லோக்சபாவில் காங்கிரஸின் தலைவராக இருக்கும் ஆதிர் ரஞசன் சௌதுரி ஞாயிறன்று ' த இந்து ' வுக்கு தெரிவித்தார்.

 கடந்த வெள்ளிக்கிழமை பீஹார் தேர்தல் குறித்து வீடியோ மூலமாக கட்சி சகாக்களுக்கு உரையாற்றிர ராகுல் காந்தி கட்சி விரும்புவதைப் போன்று சாத்தியமானளவுக்கு கூடுதல் நேரத்தை செலவிடப்போவதாக உறுதியளித்ததுடன் தேர்தல் கூட்டணிகளை அமைக்கும் சிக்கலான பிரச்சினையை கையாளும் வழிமுறைகள் குறித்து ஆலோசனையும் வழங்கினார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் பெரும்பாலும் தினமும் இந்திய -- சீன முறுகல் நிலை தொடர்பில் அதுவும் குறிப்பாக இந்திய மண்ணை எவரும் ஆக்கிரமிக்கவில்லை என்றும் இந்திய இராணுவ நிலை எதுவும் தாக்கப்படவில்லை என்றும் ஜூன் 19 சர்வகட்சி மகாநாட்டில் மோடி கூறியது குறித்து அவர் மீது ராகுல் காந்தி தாக்குதல் தொடுத்துக்கொண்டேயிருக்கிறார். மோதல் இடம்பெற்ற பகுதியைப் பற்றியே மோடி தனது உரையில்  அவ்வாறு கூறியதாக பிரதமரின் அலுவலகம் தெளிவுபடுத்திய போதிலும் கூட, ராகுல் காந்து அவரை தனிப்பட்ட ரீதியில் தாக்கிக்கொண்டேயிருக்கிறார்.

 19 தடவைகள் தாக்குதல்

 சீனத் துருப்புகளுக்கும் இந்தியத் துருப்புகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்ற ஜூன் 15 ஆம் திகதியில் இருந்து ராகுல் காந்தி ருவிட்டரில் அல்லது வீடியோ செய்திகளில் இதுவரை 19 தடவைகள் மோடியைத் தாக்கியிருக்கிறார்.சீனர்களுக்கு முன்னால் சரணாகதியடைந்து விட்டதாக மோடியைக் குற்றஞ்சாட்டிய அவர ஜூன் 21 '  ' என்று டுவிட்டரில் பதிவுசெய்தார்.

சீனா தங்கள் நிலத்தை அபகரித்துவிட்டதாக லடாக்வாசிகள் கூறுகிறார்கள்.ஆனால் பிரதமரோ "எமது நிலத்தை எவரும் எடுக்கவில்லை ; யாரோ பொய்சொல்கிறார்கள் " என்று கூறுகிறார் என்று மோடி லடாக்கில் இருந்தவேளை ராகுல் டுவிட்டரில் பதிவு செயதார்.

கொவிட்டை கையாளுதல்

கொவிட் தொற்றுநோயைக் கையாளுவது தொடர்பிலும் தனது கருத்துக்களை பகிர்ந்துகொள்வதில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் தீவிரமாக ஈடுபடுகின்றார்.நோபல் பசிசாளர் அபிஜித் பானர்ஜி, பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன், தொழிலதிபர் ராஜீவ் பஜாஜ் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் தொற்றுநோயைக் கையாளுவதற்கான வழிவகைகள் குறித்து வீடியோ மூலமான தொடர்  கலந்துரையாடல்களையும் ராகுல் காந்தி ஆரம்பித்திருக்கிறார்.கொவிட்டின் விளைவாக தோன்றியிருக்கும் நெருக்கடிகள் தொடர்பாக ஆராய்வதற்காக முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் தலைமையில் நியமிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் குழுவிலும் ஒரு அங்கமாக அவர் பங்கேற்கிறார்.

மார்ச் 25 முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு  நடைமுறைக்கு வந்த பிறகு கொவிட் நெருக்கடியை மோடி அரசாங்கம் கையாளுகின்ற முறையின் வேறுபட்ட அம்சங்கள் குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்காக ராகுல் காந்தி குறைந்தது மூன்று செய்தியாளர் மகாநாடுகளை நடத்தியிருக்கிறார்.

ஆனால், மே 8 ஆம் திகதி வீடியோ மூலமான செய்தியாளர் மகாநாடொன்றில் பத்திரிகையாளர் ஒருவர் ராகுல் காந்தியிடம், " கட்சியின் தலைமைத்துவத்தை மீண்டும் பொறுப்பேற்க நீங்கள் தயாரா" என்று கேட்டபோது " நான் ஒரு வருடத்துக்கு முன்னர் எழுதிய கடிதத்தை தயவுசெய்து பாருங்கள்" என்றே அவர் பதிலளித்தார்.

காங்கிரஸ் செயற்குழுவின் கூட்டம் ஜூன் 23 புதுடில்லியில் நடைபெற்றபோது இராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கேலொட் ஏனைய சகாக்களின் ஆதரவுடன் தலைமைத்துவப் பிரச்சினையை கிளப்பியவேளையிலும் ராகுல் காந்தி மௌனமாகவே இருந்தார்.

 ஆனால், தாயாருக்குப் பிறகு காங்கிரஸ் தொண்டர்களினால் பெரிதும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தலைவராக ராகுல் காந்தியே விளங்குவதால் கட்சிக்கு வேறு எந்த தெரிவும் இல்லை என்று அவருக்கு நெருக்கமானவர் என்று அறியப்பட்ட இன்னொரு காங்கிரஸ் தலைவர் கூறினார்.

எவ்வாறெனினும், தலைமைத்துவ பிரச்சினையை தீர்த்துவைப்பதில் ஒரு நோக்கத்துடனேயே தாமதம் காட்டப்படுவதாகவும் இருக்க்கூடும்.ஏனென்றால்,காங்கிரஸின்  பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட செல்வாக்குமிக்க ஒரு பிரிவினர் ராகுல் காந்தி தலைவராக திரும்பி வரவேண்டுமென்பதில் ஆர்வம்கொண்டவர்களாக இல்லை என்பதால், அதிருப்தி வெளிப்படையாக கிளம்பக்கூடிய சூழ்நிலை இப்போது தோன்றுவதை கட்சி விரும்பப்போவதில்லை.

( சந்தீப் புக்கான்,  த இந்து )