சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 100 சதங்கள் அடித்து சாதனைப் படைத்திருக்கும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோஹ்லியால் முறியடிக்க முடியும் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹொக் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் விளாசிய ஒரே வீரர் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மாத்திரமே ஆவார். டெஸ்ட் அரங்கில் 51 சதங்களும், சர்வதேச ஒரு நாள் அரங்கில் 49 சதங்களும் அடித்துள்ளார்.

சச்சினின் சாதனையை தற்போது 70 சதங்களைப் பெற்றுள்ள (டெஸ்டில் 27 சதங்கள், ஒரு நாள் அரங்கில் 43 சதங்கள்) இந்திய கிரிக்கெட் அணித்தலைவரான விராட் கோஹ்லியால் முறியடிக்க முடியுமா? என்று ரசிகர் ஒருவர் அவுஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹொக்கிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ஹொக், ‘‘சச்சினின் 100 சதங்கள் சாதனையை கோஹ்லியால் நிச்சியம் முறியடிக்க முடியும். சச்சின் விளையாடத் தொடங்கியபோது இருந்ததை விட இப்போது வீரர்களின் உடற்தகுதி பராமரிப்பு சிறப்பாகவுள்ளது. உடற்தகுதியை தொடர்ந்து வலுவாக வைத்திருக்க தரம்வாய்ந்த நிபுணர்கள் உதவுகிறார்கள்.

அது மட்டுமின்றி வீரர்களுக்கு உதவுவதற்கு கிரிக்கெட் சபை நிறைய உடற்தகுதி நிபுணர்களையும்,  வைத்தியர்களையும் கைவசம் வைத்துள்ளது. ஏதாவது சிறிய காயம் என்றாலும் வீரர்கள் உடனே சுதாரித்து விடுகிறார்கள். காயப்பிரச்சினையால் ஒரு வீரர் தவற விடும் போட்டிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். 

மேலும், தற்போதைய காலக்கட்டத்தில் அதிகமான கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்படுகின்றன. இவற்றை எல்லாம் பார்க்கும்போது, கோஹ்லியால் சச்சினின் சாதனையை தகர்த்து விட முடியும் என்றே நினைக்கிறேன்’’ என்றார்.